சீதனம் இல்லாத சீதை, தனி நாடு வேண்டுமாம் !
சீதனம் இல்லாத சீதை,  தனி  நாடு  வேண்டுமாம் !

பெண் பார்க்கும் படலம் தொடங்கி பல வருடங்களாகி விட்டது.

பார்க்க வந்த அனைவரையும் கணவனாய் நினைத்துதான் தேநீர் கொடுத்தேன்.

அடுத்த ஐந்து நிமிடங்களில்,

"சொல்லியனுப்புறோம்" என்று சொல்லி சென்றவர்கள். இன்னும் பதில் இல்லை.

நான் மலர்ந்தும் வாசம் வீசாத மலரோ?

தேடி தேனிக்கள் வரவில்லை.

வண்டுகளுக்கு கூடவா வழி தெரியவில்லை!

கல்யாண சந்தையில் விலை போகாத பிழையற்ற பொம்மை நான்.

கூட படித்தவள் கூப்பிடுகிறாள்,

அவள் பிள்ளை ஆளாகிவிட்டதென்று!

காலச்சக்கரம் சுழன்று கொண்டேயிருக்கிறது என்னையும் சுமந்து கொண்டு..

அழகை மட்டுமே அவையில் வைத்த நான்_இன்று

அவற்றையும் அடமானம் வைத்துவிட்டேன் என் வயதிடம்!

கட்டி முடிக்கப்பட்ட என் கருவறை காலியாய் கிடக்கிறது,

குடி போக குழந்தையின்றி!

என் தலையணையை கேட்டுப்பாருங்கள்...

கணவனாய் நினைத்து அவற்றுடன் நான் புரிந்த ஊடல் காவியங்களை.!

நான் விளை நிலம்தான்...

விதைக்க ஆளில்லாமல் தரிசாய் மாறிய

என் தாயின் எழுத்துப்பிழை!

இராமன் வேண்டாம்...

இராவணன் கூட வரவில்லை....

சீதனம் இல்லாத இந்த சீதையை தூக்கிச்செல்ல...

என் அன்புத் தந்தையே!

உங்களுக்கு நான், 

பாரமாய் இருந்தால் சொல்லி விடுங்கள்.!

என்னால் முடியவில்லை.

இறக்கி வைத்து விடுகிறேன்,

என் இறுதி மூச்சை!


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

www.lanka4tv.com