இலங்கையில் சினிமா ஊடாக அரசியல் நகர்வை மேற்கொள்ளும் இந்தியா!
இந்தியாவின் ஆடுகளம் மெல்ல மெல்ல வடக்கு, கிழக்கை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக தென்னிய சினிமாவின் பார்வை வடக்கை நோக்கி குறிவைத்துள்ளது.
அபிவிருத்தியின் பெயராலோ, கொடைகளின் பெயராலோ, முதலீடுகள் என்ற பெயரிலோ திறக்கப்பட்ட இந்தியாவின் ஆடுகளம், இப்போது புதிய புதிய பரிணாமங்களில் புதிய புதிய களங்களை நோக்கி விரிவடையத் தொடங்கியிருக்கிறது. அந்தவகையில் தான் சினிமா பக்கம் திரும்பியுள்ளது.
போர் முடிவடைந்து 14 ஆண்டுகள் இடைவெளியின் பின்னர் இந்த ஆண்டு தான் தென்னிந்திய சினிமாவின் பார்வை அதிகளவு வடக்கை நோக்கி திரும்பியுள்ளது. திரும்பியுள்ளது என்று சொல்வதற்கு பதிலாக திருப்பப்பட்டுள்ளது என்றும் சொல்லலாம்.
அண்மைக்காலமாக வடக்கில் இந்தியாவின் ஆதிக்கம் பரவலாக எல்லாத் துறைகளிலும் குறிப்பாக அரசியல் கலை போன்ற துறைகளில் அதிகமாக ஆதிக்கம் செலுத்துகின்றன.
யாழ்ப்பாணத்தில் கலாச்சார மண்டபம் கட்டியதில் இருந்து விமான நிலைய உருவாக்கம் தொடக்கம் பல்வேறு வகைகளில் இந்தியாவின் கை மேலோங்கி இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
வடக்கு, கிழக்கின் மீது இந்தியா தனது செல்வாக்கிற்குட்பட்ட பிரதேசமாகவே அதனை கருதி வருகின்றது. தன்னை மீறி வடக்கு கிழக்கில் எதுவும் நடந்து விடாமல் இந்தியா களுகுப் பார்வை பார்த்துக் கொண்டிருக்கிறது.
அதற்கு பல்வேறு உத்திகளையும் இந்தியா கையாண்டு வருகின்றது.
வடக்கில் முதலீடுகளை குவித்த இந்தியா அண்மைக்காலமாக கலை மற்றும் சினிமா பக்கம் திருப்பியுள்ளது. கலை மூலம் தனது அரசியல் ஆதிக்கத்தை மேலும் பலப்படுத்த எத்தனிக்கின்றது. அதற்காக தென்னிந்திய கலைஞர்களை வடக்கிற்கு அனுப்பி இலவச கலை நிகழ்ச்சிகளை நடாத்தி வருகின்றது.
அண்மைகாலமாக யாழ்ப்பாணத்திற்கு அதிகளவிலான தென்னிந்திய சினிமா பிரபலங்கள் படையெடுக்கின்றனர். திட்டமிட்டு இவர்கள் இலங்கைக்கு அனுப்பப்படுவதாகவே பல தரப்பினரிடமிருந்தும் கருத்துக்கள் வெளிவருகின்றன.
ஈழத்தமிழர்களின் முன்னணி பிரபலமான வியாபார நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகளை இதற்காக இந்திய உளவுத் துறை பயன்படுத்துகின்றது. அவர்களும் இந்தியாவின் செல்வாக்கை பயன்படுத்துதற்காகவும் அதற்கு உடந்தையாக உள்ளனர்.
கடந்தகாலங்களில் யாழ்ப்பாணம் கல்வியின் உச்சநிலையில் இருந்துள்ளமையை யாராலும் மறுக்க முடியாது..ஆனால் அந்தளவிற்கு தற்பொழுது கல்வியின் நிலை இல்லை. படிப்படியாக குறைந்து வருகின்றது.
அண்மையில் கூட வடக்கு ஆளுநர் மாணவர்களின் கல்வி தொடர்பில் கருத்து கூறியிருக்கின்றார். அதுவும் ஆரம்பக் கல்வி கற்கும் மாணவர்களில் 7 சதவீதத்தினருக்கு எழுத்தறிவு இல்லை எனவும் மாணவர்களிடையே கல்வியின் நாட்டம் குறைந்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
அத்தோடு பாடசாலை மாணவர்களின் இடைவிலகலும் அதிகரித்துள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் செல்லும் வீதம் தற்பொழுது சடுதியாக குறைவடைந்துள்ளதாகவும் அண்மையில் நீதிபதி இளஞ்செழியன் ஒரு உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறாக தமிழ் மாணவர்களின் கல்வி நிலை தற்பொழுது அடி மட்டத்தில் உள்ளதால் பலரது விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது.
இதுஇவ்வாறு இருக்க தற்பொழுது சினிமாவின் ஆதிக்கமும் வடக்கு கிழக்கில் அதிகரித்துள்ளது. இது திட்டமிட்டு நகர்த்தப்படும் நகர்வுகளே..
இளைஞர்களின் மத்தியில் சினிமாவின் பார்வைவைக்குள் முடக்கி விட்டு அவர்களை சிந்திக்க விடாமல் போராட்டங்களுக்கு நகர்த்தாமல் ஒருபுத்திசாலித்தனம் அற்ற சமூகத்தினை தமிழ் மக்களிடையே உருவாக்குவதற்கே இலங்கை அரசாங்கம் இதுவரை காலமும் செய்து வந்துள்ளது. அதே பணியை தான் தற்பொழுது இந்தியாவும் கையாண்டு வருகின்றது.
அதற்கு உதாரணமாகத்தான் தமிழின விடுதலைக்காய் போராடியவர்களின் நினைவேந்தல் நாட்களில் கலை நிகழ்ச்சிகளை திட்டமிட்டு வைப்பது..
அதேபோல் இந்திய கலாச்சார மண்டபம் ஊடாக இந்திய கலை நிகழ்வுகளை வைப்பதும், இந்திய சுதந்திர தினத்தினை பிரமாண்டமாகாக கொண்டாடுவதும் திட்டமிட்டு நகர்த்தப்படும் நகர்வுகளே...
தமிழ் மாணவர்களை கல்வியின் பால் திசை திருப்பாமல் கேளிக்கை நிகழ்ச்சிகளை அவர்களின் மனங்களில் விதைக்கும் செயற்பாட்டினை திட்டமிட்டு செய்கின்றனர்.
வடக்கு இளைஞர்களும் அதற்கு இசைந்து கொடுக்கின்றனர். இந்தியாவில் உள்ளது போல் சினிமா மோகம் பிடித்து விஜய்க்கு ரசிகர்மன்றம் அஜித்துக்கு ரசிகர் மன்றம். விஜயின் படத்தினை ஐந்தாறு தடவைகள் தியேட்டரில் பார்ப்பது, பட வெற்றி விழாக் கொண்டாட்டம் என சினிமா மோகம் தலைக்கேறி அலைகின்றனர். இது இந்தியாவிக்ரு சாதகமாக அமைகின்றன.
சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்துள்ள நிலையில் இந்தியா தான் இலங்கைக்குள் எவ்வாறு ஊடுருவலாம் என எண்ணி அதன் மூலம் இலகுவாக மக்களின் மனங்களில் இடம்பிடிக்கலாம் என சரியாக புரிந்துகொண்டு அவதானமாக காய் நகர்த்தி வருகின்றது இந்தியா...
இதற்கு தமிழ்மக்களின் அரசியல் தலைமைகளும் கண்டும் காணாமலும் இந்தியாவிற்கு வால் பிடித்துக் கொண்டும் இருக்கின்றனர். மலையக அரசியல்வாதிகள் இந்தியாவை எந்தளவிற்கு பயன்படுத்துகின்றார்.
ஆனால் வடக்கு கிழக்கு அரசியல்வாதிகள் அவ்வாறு இல்லை. வெறும் பேச்சுக்களோடு மட்டும் நிறைவடைகின்றன..மலையக அரசியல்வாதிகளிலிடமிருந்து வடக்கு கிழக்கு அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும்..எவ்வாறு இந்தியாவை நாங்கள் பயன்படுத்தலாம்..அவர்களிடமிருந்து எவ்வாறு பயனடையலாம் என சிந்திக்க வேண்டும்.
அதைவிடுத்து இந்தியா போடும் அற்ப சொற்ப இலவச இசை நிகழ்ச்சிகள் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காமல் அவற்றை எவ்வாறு கையாளலாம் என பார்க்க வேண்டும்..
முளையிலேயே இவ்வாறான செயற்பாடுகளை கிள்ளிவிட வேண்டும் இல்லையேல் போர் இல்லாமலே தமிழனத்தின் அழிவை பார்க்கலாம்.
எமது அடுத்த தலைமுறையினர் சினிமாவின் பக்கம் திரும்பாமல் கல்வியின் பக்கம் திரும்புவதற்கு ஊக்கமளிக்க வேண்டும்.
ஒரு ஆரோக்கியமான சமூகத்தினை எதிர்காலத்தில் உருவாக்குவது ஒவ்வொரு தமிழ் அரசியல்வாதிகளினதும் நோக்கமாக இருக்கவேண்டும்.
அதேபோல் இந்தியாவின் காய் நகர்த்தல்களையும் சரியாக கையாண்டு அதற்கான தீர்வுகளை ஆராய வேண்டும்.