யாழ்ப்பாணத்தில் திசை மாறிச் செல்லும் இளைஞர் சமுதாயம்! இதற்கு யார்தான் காரணம்?

#SriLanka #Jaffna #drugs
Mayoorikka
1 month ago
யாழ்ப்பாணத்தில் திசை மாறிச் செல்லும் இளைஞர் சமுதாயம்! இதற்கு யார்தான் காரணம்?

யாழ்ப்பாணத்தில் போருக்கு பின்னர் இளைஞர்களின் வாழ்வியல் மற்றும் கலாச்சாரத்தில் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது. ஆயுதக் குழுக்கள் மௌனிக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் இளைஞர்கள் மத்தியில் மேலும் தலை தூக்கியுள்ளது.

 யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட வாள்வெட்டு கலாச்சாரமானது ஒரளவு குறைந்திருந்த நிலையில் தற்போது அண்மைக்காலமாக மீளவும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒருகாலத்தில் கலாச்சாரத்திற்கு பெயர்பெற்ற யாழப்பாணத்தில் தற்பொழுது வாள்வெட்டு போதொப்பொருள் கலாச்சாரம் ஊடுருவி விஸ்வரூப வளர்ச்சி பெற்றுள்ளது.

 ஒரு காலகட்டத்தில் யாழ்பாணம் என்றாலேஉலகளவில் புகழ் வாய்ந்த பெருமைகளினதும் சிறப்புகளினதும் பிறப்பிடம். ஆனால் இன்று யாழ்பணம் என்றாலே அச்சம் என்ற ஓர் நிலை. இது உருவானதா? அல்லது திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா? என்பதனை சிந்திக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் இதை சிந்திக்க வேண்டும்.

 இப்போது யாழில் இடம் பெறும் வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் இராணுவத்தினரின் பங்களிப்பு இருக்கின்றது என்று கூறப்பட்டாலும் அவை அப்படியே மூடி மறைக்கப்பட்டு விடுகின்றது. அண்மையில் கூட யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் கடற்படையினருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகின்றது. 

கடற்படையினரின் முகாமிற்குள் தஞ்சம் கோரியவர்களையே வாள்வெட்டுக் குழுவினர் கடற்படையினருக்கு முன்பாக சரமாரியாக தாக்கி கடத்தி சென்று கொலை செய்தார்கள். யாழ்ப்பாணத்தில் போதைப் பொருளை பாவனை மற்றும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு இராணுவம் மற்றும் கடற்படையினரை வைத்திருப்பதாக கூறும் அரசாங்கம் தற்பொழுது அவர்களே இவ்வாறான குற்றச் செயல்கள் அதிகரிக்க காரணமாக இருக்கின்றார்கள்.

 அரசாங்கம் பேச்சளவில் மாத்திரமே போதைப் பொருளினை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றோம் கூறிக் கொள்கின்றதே தவிர உண்மையாக அவை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதற்காக வீதிகளால் முழத்துக்கு முழம் இராணுவத்தினரை நிற்பாட்டி பொதுமக்களின் பிரயாணங்களினை தாமதப்படுத்துகின்றார்களே தவிர உண்மையான குற்றாவாளிகளை பிடிக்கின்றார்கள் இல்லை. அவ்வாறு குற்றவாளிகள் பிடிபட்டாலும் உடனடியாகவே வெளியில் வந்து விடுகின்றார்கள். 

காரணம் இவர்களுக்காக வாதாட ஒருசில சட்டத்தரணிகள் உள்ளனர். சட்டத்தரணிகள் தமது உழைப்பினைப் பார்க்காமல் இவர்களுக்காக வாதாடுவதனை தவிர்ப்பார்களேயானால், அவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைத்தால் இவற்றினை ஓரளவிற்கு குறைக்கலாம். இவ்வாறான வாள்வெட்டு போதைப்பொருள் பாவனைகளை கட்டுப்படுத்த அனைத்து தரப்பினரும், ஒன்றிணைய வேண்டும்.

 அதிகரித்துள்ள குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் புத்திஜீவிகள் அரசியல்வாதிகள் பொலிஸாருடன் இணைந்து கலந்துரையாடல்களினை மேற்கொள்ள வேண்டும் வாள்வெட்டு கலாசாரத்தை தடுக்க வாள் உற்பத்தியாளர்களை கைது செய்ய வேண்டும். பொலிஸாரும் மக்களுடன் இணைந்து செயற்பட வேண்டும்.

 இளைஞர்கள் வழிதவறாமல் செல்வதற்கு நம்பிக்கையூட்டும் வகையில் அவர்களது வாழ்க்கை முறை இருக்க வேண்டும். இளைஞர்களது வாழ்க்கை முறையை சரியாக கொண்டு சென்றாலே எதிர்கால சந்ததிகள் முறையான சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவார்கள். ஒரு போதையற்ற கொலைகளற்ற ஆரோக்கியமான சமூகத்தினைக் கட்டியெழுப்பலாம்.