வெடுக்குநாறிமலை தீர்ப்பு! நீதவானுக்கு எச்சரிக்கை விடுத்த சிங்கள சமூக வலைத்தளம்: சிறிதரன் எடுத்த நடவடிக்கை

#SriLanka #Vedukunarimalai Adilingeswarar Temple #Judge #sritharan
Mayoorikka
1 month ago
வெடுக்குநாறிமலை தீர்ப்பு! நீதவானுக்கு எச்சரிக்கை விடுத்த சிங்கள  சமூக வலைத்தளம்: சிறிதரன் எடுத்த நடவடிக்கை

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய சிவராத்திரிதின நிகழ்வு தொடர்பில் பொலிஸாரால் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்த வவுனியா நீதிமன்ற நீதவானுக்கு சிங்கள முக நூல் (பேஸ்புக்) ஒன்றில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. யான எஸ். சிறிதரன் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

 பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான 2 ஆம் நாள் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்விடயத்தை சபையின் கவனத்திற்கு கொண்டு வந்த சிறிதரன் எம்.பி. தொடர்ந்து பேசுகையில், வெட்டுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய சிவராத்திரிதின நிகழ்வு தொடர்பில் பொலிஸாரால் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்ட 8 பேரும் வவுனியா நீதிமன்ற நீதியரசரால் விடுதலை செய்யப்பட்ட பின்னர்

 ''வடக்கு எமது உரிமை ''எனவும் பெயரில் உள்ள சிங்கள முக நூல் பக்கத்தில் இந்த 8 பேரையும் விடுதலை செய்த நீதியரசரின் பெயரைக்குறிப்பிட்டு விரைவில் அவர் குருந்தூர் மலை விவகாரத்தில் தீர்ப்பு வழங்கியவர் நாட்டை விட்டு தப்பியோடியது போன்று தப்பியோடுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 நீதியாக வழங்கப்படும் தீர்ப்பைக்கூட சிங்கள பேரினவாதத்தால் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது என்பதைத்தான் இந்த சிங்கள முக நூல் செய்தி மிகவும் வெளிப்படையாக குறிப்பிடுகின்றது. இந்த நாட்டில் அடிக்கடி நல்லிணக்கம் பற்றி பேசுகின்றவர்கள் வெட்டுக்குநாறிமலையில் நடந்த பொலிஸ் அராஜகம் பற்றி கருத்தில் கொள்ளுங்கள் .

தான் விரும்பும் மதத்தை வணங்கமுடியாத நாட்டில் எப்படி உங்களினால் நல்லிணக்கம்பற்றி வாய் கிழிய கத்த முடியும்?நல்லிணக்கம் என்பது பேச்சளவில் மட்டும் இருப்பதல்ல. ஓர் இன மக்களை அனுசரித்தது நடப்பதில்தான் அது உள்ளது. எனவே வெட்டுக்குநாறி மலையில் இந்து மக்கள் வழிபட எந்த தடையும் இனிமேல் இருக்கக்கூடாது.

 இந்தப்பிரச்சினைக்கு முழுமையான காரணம் தொல்பொருள்துறைக்கு அமைச்சராக இருக்கின்ற விதுர விக்கிரமநாயக்கதான்.அவர் ஒரு நேர்மையாக , கள்ளம் கபடமற்று இதயசுத்தியோடு செயற்படுவாரேயானால் , இனங்களை மதித்து செயற்படுவாரேயானால் இந்த நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்க நியாயமில்லை .

 வெட்டுக்குநாறிமலையில் தொல்லியல் திணைக்களமும் பொலிஸாரும் அராஜகமாக நடந்து கொண்ட முறை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தியப்பிரதமர் நரேந்திரமோடிக்கும் நான் எழுதிய கடிதத்தின் பிரதியையும் இந்த சபையில் சமர்ப்பிக்கின்றேன் என்றார்.