மன்னாரில் அதிக விலைக்கு விற்கப்படும் மாட்டிறைச்சி - பொதுமக்கள் விசனம்

#SriLanka #Mannar
Lanka4
3 weeks ago
மன்னாரில் அதிக விலைக்கு விற்கப்படும் மாட்டிறைச்சி - பொதுமக்கள் விசனம்

மன்னார் மாவட்டத்தில் உள்ள நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் கீழ் இயங்கும் மாட்டிறைச்சி விற்பனை நிலையங்கள் பலவற்றில் அதிக விலைக்கு மாட்டிறைச்சி விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறிப்பாக மன்னார் பிரதேச சபையின் கீழ் இயங்கும் மாட்டிறைச்சி விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ மாட்டிறைச்சி 1800 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகின்ற நிலையில் மன்னார் நகரசபைக்கு உட்பட்ட மாட்டிறைச்சி நிலையங்களில் 2000 ரூபாவாக விற்கப்படுவதாக பொது மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.

மன்னார் நகர சபையின் கீழ் இயங்கும் மாட்டிறைச்சி விற்பனை நிலையங்கள் அதிகளவுக்கு மாட்டிறைச்சி விற்பனை செய்வது மாத்திரம் இல்லாமல் பிரதேச சபை எல்லைக்குள் குறைந்த விலையில் மாடுகள் இறைச்சிக்காக கொள்வனவுக்காக தெரிவு செய்யப்படும் நிலையில் அவற்றை அதிக விலைக்கு கொள்வனவு செய்து மாட்டின் விலையையும் சந்தையில் அதிகரிப்பதாக ஏனைய பிரதேச சபை மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னதாகவே மன்னார் மாட்டிறைச்சி விற்பனை நிலையங்களில் கடந்த உள்ளூராட்சி சபைகள் இருந்த காலப்பகுதியில் மாட்டிறைச்சியின் விலை 1800 ரூபாவாக நிர்ணயிக்கப் பட்டிருந்த நிலையில் உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்ட நிலையில் குறித்த நிர்ணய விலை நீக்கப்பட்டதாக உள்ளூராட்சி மன்றங்கள் தெரிவித்திருந்தன.

இது தொடர்பாக மன்னார் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளரை வினவிய நிலையில் மாட்டிறைச்சி விற்பனை விலையை தீர்மானிப்பதற்கு தங்களுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் தெரியப்படுத்திய நிலையில் மாட்டிறைச்சியை ஒரே மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதியில் வெவ்வேறு விலையில் விற்பனை செய்வது என்பது பொருத்தமற்றது .

எனவே நிர்ணய விலை ஒன்றை தீர்மானிப்பது தொடர்பில் நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபை உள்ளடங்களாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.