ஒரு மாதத்திற்கு முன் காணாமற்போன இந்திய மாணவர் சடலமாக மீட்பு

#Death #Student #America #Missing #Indian
Prasu
3 weeks ago
ஒரு மாதத்திற்கு முன் காணாமற்போன இந்திய மாணவர் சடலமாக மீட்பு

அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அந்நாட்டில் இந்திய மாணவர்கள் அடுத்தடுத்து துர்மரணமடைவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் முகமது அப்துல் அர்பாத் (25). 

இவர் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள ‘க்ளீவ்லேண்ட் ஸ்டேட் யுனிவர்சிட்டி’யில் முதுகலைப் பட்டப் படிப்புக்காக கடந்த ஆண்டு அங்கு சென்றார்.

இந்நிலையில் கடந்த மார்ச் 7ம் திகதிக்குப் பிறகு அர்பாத்தை தொடர்பு கொள்ள இயலவில்லை என அவரது குடும்பத்தினர் இந்திய தூதரக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். 

இதையடுத்து அமெரிக்காவில் உள்ள சட்ட முகமைகளின் உதவியுடன் அர்பாத்தை கண்டறியும் பணியில் இந்திய தூதரக அதிகாரிகள் ஈடுபட்டனர். கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக தேடுதல் பணி நடைபெற்ற நிலையில், அர்பாத்தை சடலமாக மீட்டுள்ளதாக நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் இன்று காலை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், “தேடப்பட்டு வந்த முகமது அப்துல் அர்பாத், ஓஹியோவில் உள்ள கிளீவ்லேண்டில் இறந்து கிடந்ததை அறிந்து வேதனை அடைந்துள்ளோம். 

முகமது அர்பாத்தின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.” என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் 19ம் திகதி அன்று, அர்பாத்தின் தந்தை முகமது சலீமுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. அந்த நபர், போதைப்பொருள் விற்கும் கும்பலால் அர்பாத் கடத்தப்பட்டதாகவும், அவரை விடுவிக்க 1,200 டொலர் தர வேண்டும் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார். 

இச்சூழலில் அவர் சடலமாக மீட்கப்பட்டது அர்பாத்தின் குடும்பத்தினரை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஆண்டு அமெரிக்காவில் இந்திய மற்றும் இந்திய வம்சாவளி மாணவர்கள் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 

தொடர்ந்து அதிகரிக்கும் இந்திய மாணவர்களின் மரணம், அங்குள்ள இந்திய மாணவர்களையும், இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினரையும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.

வெளிநாடுகளில் உயர்கல்வியைத் தொடர விரும்பும் இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா மிகவும் விருப்பமான தேர்வாக உள்ளது. 

அந்நாட்டு அரசு தகவல்படி, 2022-2023ம் கல்வி ஆண்டில் 2.6 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் அமெரிக்காவுக்கு கல்வி பயில வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய கல்வி ஆண்டை விட 35 சதவீதம் அதிகமாகும்.