வியட்நாமில் பிரபல கோடீஸ்வர பெண்ணுக்கு மரண தண்டனை விதிப்பு

#Death #Arrest #Court Order #Women #Vietnam #Case #Fraud #penalty
Prasu
3 weeks ago
வியட்நாமில் பிரபல கோடீஸ்வர பெண்ணுக்கு மரண தண்டனை விதிப்பு

வியட்நாம் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

இதில், பல்வேறு தொழிலதிபர்கள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள்,அவர்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் என ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில், கோடீஸ்வர பெண் திராங் மை லானும் ஒருவர். இவரது நிறுவனமான வான் தின் பாட் நிறுவனத்தின்கீழ், உயர்தர ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. நிதிச் சேவைகளிலும் இந்த நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

சாய்கோன் கமர்ஷியல் வங்கியின் சுமார் 90 சதவீத பங்குகளை வைத்திருந்த லான், போலி கடன் விண்ணப்பங்களை பயன்படுத்தி அந்த வங்கியில் இருந்து பணத்தை எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. 

இவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மோசடியில் ஈடுபட்டதாகவும், இதனால் வங்கிக்கு 27 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த தொகை நாட்டின் 2023 மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) ஆறு சதவீதத்திற்கு சமம். நாட்டையே அதிர வைத்த இந்த மோசடி வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், லான் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. 

இதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதிகள் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளனர். வியட்நாமில் இத்தகைய வழக்கில் மரண தண்டனை என்பது வழக்கத்திற்கு மாறாக கடுமையான தண்டனை ஆகும்.

இதேபோல் இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 85 பேர் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. லஞ்சம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் முதல் நிதி கையாடல் மற்றும் வங்கிச் சட்டத்தை மீறுதல் வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை லான் மறுத்துள்ளார். தனக்கு கீழ் உள்ள அதிகாரிகள்தான் இதற்கு காரணம் என்றும் கூறினார்.

இறுதிக்கட்ட விசாரணைக்காக லான் கடந்த வாரம் கோர்ட்டில் ஆஜரானபோது, தான் கடுமையான விரக்தியில் இருப்பதாகவும், தற்கொலை செய்யத் தோன்றுவதாகவும் கூறினார். “நான் மிகவும் கோபமாக இருக்கிறேன். இந்தக் கடுமையான வணிகச் சூழலில், வங்கித் துறையில் எனக்கு சிறிதும் அறிவு இல்லை” என்றும் அவர் தெரிவித்தார்.