இலங்கையின் பொருளாதார மீட்சி தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கி கரிசனை!

#SriLanka #Bank #Asia #economy
Mayoorikka
2 weeks ago
இலங்கையின் பொருளாதார மீட்சி தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கி கரிசனை!

பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படையாக அமைந்த காரணிகளைக் களைவதற்கும், நிலையான மீட்சிக்கான அடித்தளத்தை இடுவதற்கும், மீண்டெழும் தன்மையைக் கட்டியெழுப்புவதற்கும், வளர்ச்சியை அடைந்துகொள்வதற்கும் தற்போதைய மறுசீரமைப்புக்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும், வறிய மற்றும் நலிவுற்ற சமூகப்பிரிவினர் மீது ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டியது மிக அவசியம் எனவும் ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கையை வலியுறுத்தியுள்ளது.

 ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள 2024 ஏப்ரல் மாதத்துக்கான ஆசிய அபிவிருத்தி மதிப்பீட்டின்படி, கடந்த இருவருடங்களாகத் தொடர்ந்து அவதானிக்கப்பட்ட பொருளாதாரச்சுருக்கத்தை அடுத்து இவ்வருடம் இலங்கை 1.9 சதவீத மிதமான வளர்ச்சியையும், 2025 இல் 2.5 சதவீத வளர்ச்சியையும் பதிவுசெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

 'கடந்த ஆண்டின் பின்னரை பாகத்திலிருந்து இலங்கையில் பொருளாதார மீட்சிக்கான குறிகாட்டிகள் தென்படுகின்றன. பணவீக்கம் ஓரிலக்கப்பெறுமதிக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. வெளிநாட்டுக்கையிருப்பின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்துவருகின்றது. நாணயமாற்றுவிகிதம் உயர்வடைந்துள்ளது. சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டுப்பணவனுப்பல்கள் மூலமான வருமானம் தொடர்ந்து சாதக மட்டத்தில் பதிவாகிவருகின்றது. 

உரியகாலத்தில் வெளியகக் கடன்மறுசீரமைப்பைப் பூர்த்திசெய்வதானது இலங்கையின் கடன் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு உதவும்' என ஆசிய அபிவிருத்தி வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. அதேவேளை மிகக்கடினமான கொள்கை மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துவதிலும், 2023 இல் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதிலும் இலங்கை பாராட்டத்தக்க வகையிலான முன்னேற்றத்தைக் காண்பித்திருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பிரதிப்பணிப்பாளர் உட்சவ் குமார் தெரிவித்துள்ளார்.

 'மீட்சிக்கான குறிகாட்டிகளுடன் இணைந்ததாக இந்த மறுசீரமைப்புக்கள் மூலம் கிடைத்துள்ள பெறுபேறுகள் குறித்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

 இருப்பினும் வறிய மற்றும் நலிவுற்ற சமூகப்பிரிவினர்மீது ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பில் இலங்கை கவனம் செலுத்தவேண்டியது மிக அவசியமாகும். அதேபோன்று இந்த நெருக்கடிக்கு அடிப்படையாக அமைந்த காரணிகளைக் களைவதற்கும், நிலையான மீட்சிக்கான அடித்தளத்தை இடுவதற்கும், மீண்டெழும் தன்மையைக் கட்டியெழுப்புவதற்கும், வளர்ச்சியை அடைந்துகொள்வதற்கும் தற்போதைய மறுசீரமைப்புக்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்தவேண்டும்' எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 பொருளாதார மீட்சிக்கு மத்தியில் வறுமையைக் கையாள்வதென்பது இலங்கை முகங்கொடுத்திருக்கும் மிக முக்கிய சவால் எனவும், கொவிட் - 19 வைரஸ் பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி போன்றவற்றின் விளைவாக வறுமை நிலை தீவிரமடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி, நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடையும் வேளையில், மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட நலிவுற்ற சமூகப்பிரிவினர் பாதுகாக்கப்படுவதையும், உயர் வறுமை மற்றும் வருமான சமத்துவமின்மை என்பன உரியவாறு கையாளப்படுவதையும் அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும் எனத் தெரிவித்துள்ளது.