பிரச்சாரதிற்காக கச்சதீவு விவகாரத்தை மீண்டும் கையிலெடுத்த பா.ஜ.க: மிலிந்தமொராகொட

#SriLanka #kachchaitheevu
Mayoorikka
2 weeks ago
பிரச்சாரதிற்காக கச்சதீவு விவகாரத்தை மீண்டும் கையிலெடுத்த பா.ஜ.க: மிலிந்தமொராகொட

கச்சதீவு விவகாரத்தை பாரதிய ஜனதா கட்சி மீண்டும் கையிலெடுத்திருப்பது தேர்தல் பிரச்சாரம் தொடர்பான செயற்பாடு என இந்தியாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் மிலிந்தமொராகொடவின் பாத்பைன்டர் அமைப்பு தெரிவித்துள்ளது.

 கச்சதீவை சுற்றியுள்ள குழப்பமான நிலை தொடர்ந்து நீடிக்கின்ற அதேவேளை இலங்கையின் புத்திஜீவிகள் அமைப்பான பாத்பைன்டர் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகளிற்காக கச்சதீவு விவகாரம் கிளறப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

 இந்திய நாடாளுமன்ற தேர்தலில் இந்த விவகாரம் முக்கியமானதாக மாறியுள்ளது. பலதசாப்தகாலமாக இரண்டு திராவிட கட்சிகளால் ஆளப்படும் தமிழ்நாட்டில் கால்பதிப்பதற்கு பாரதிய ஜனதா தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி 1974ம் ஆண்டு கச்சதீவை இலங்கைக்கு தாரைவார்த்தது என நரேந்திரமோடி குற்றம்சாட்டியுள்ளார். அவ்வப்போது இந்த பிரச்சினையை எழுப்புவதன் மூலம் இந்தியா கச்சதீவில் மீன்பிடிப்பதற்கான உரிமையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு முயல்கின்றது என பாத்பைன்டர் அமைப்பு தெரிவித்துள்ளது.

 இந்தியா விரும்புவது போல கச்சதீவை சுற்றியுள்ள பகுதிகளில் மீன்பிடிப்பதற்கான உரிமையை இலங்கை வழங்கினாலும் இலங்கையின் இயற்கை வளங்களை இந்திய மீனவர்கள் கொள்ளையடிப்பதை இந்தியா எவ்வாறு தடுக்கும் என்பது தெரியவில்லை என பாத்பைண்டர் அமைப்பு தெரிவித்துள்ளது.

 இலங்கையின் சட்டங்களின் படி இழுவைவலை மீன்பிடித்தல் சட்டவிரோதமானது என்பதை அலட்சியம் செய்துவிட்டு தனது 4000 டிரோலர் படகுகள் இழுவைவலை மீன்பிடித்தலில் ஈடுபடுவதை இலகுவாக்குவதற்காக இலங்கையின் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு இந்திய மீனவர்களிற்கு அனுமதி வழங்கவேண்டும் என இந்தியா கடந்த 25வருடங்களாக வேண்டுகோள் விடுத்துவருகின்றது என பாத்பைண்டர் அமைப்பு தெரிவித்துள்ளது.

 சர்வதேச கடல்எல்லையை தாண்டி ஆயிரக்கணக்கான டிரோலர்கள் இழுவைவலை மீன்பிடிப்பில் ஈடுபடுகின்றன இதன் காரணமாகவே அவர்கள் கைதுசெய்யப்படுகின்றனர் இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து அனுமதியின்றி மீன்பிடித்த குற்றச்சாட்டுகளின் கீழ் இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்படுகின்றனர் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

 இந்திய மீனவர்களின் இந்த அத்துமீறல்களுடன் ஒப்பிடுகையில் கைதுசெய்யப்படுபவர்களின் எண்ணிக்கை மிகச்சிறியதே என தெரிவித்துள்ள பாத்பைண்டர் அமைப்பு நீதிமன்றங்கள் நாட்டின் சட்டங்களை நடைமுறைப்படுத்திய பின்னர் சில கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் சில வாரங்களில் விடுதலை செய்யப்படுகின்றனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

 எனினும் மீன்பிடி நலன்களால் தூண்டப்பட்ட தமிழ்நாடு அரசியல்வாதிகள் புதுடில்லியிடம் இது குறித்து முறைப்பாடு செய்வதை வழமையாக வைத்திருக்கின்றனர் எனவும் பாத்பைன்டர் அமைப்பு தெரிவித்துள்ளது. கச்சதீவு தொடர்பில் தனக்கு இறைமை உள்ளபோதிலும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எதனையும் எடுக்காமல் அலட்சியமாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ள பாத்பைன்டர் அமைப்பு கச்சதீவில் மீன்பிடிதொடர்பான ஆராய்ச்சி நிலையத்தை ஏற்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ளது.

 இலங்கை அதிகாரிகளின் கண்களில் அது வெற்றிநிலமாக காணப்படலாம் ஆனால் அது மூலோபாயரீதியில் முக்கியமானதாக காணப்படுகின்றது அந்த பகுதி மீன்பிடிவளங்களை கொண்டுள்ளது என்பதை கருத்தில் கொள்ளும் போது அதனை ஆக்கபூர்வமாக பயன்படுத்தலாம் எனவும் பாத்பைன்டர் அமைப்பு தெரிவித்துள்ளது.