அநுரவின் யாழ்ப்பாண மேடையில் சுமந்திரனும் ஏறினார்” போலிச் செய்தியின் நோக்கம் என்ன?

#SriLanka #M. A. Sumanthiran #AnuraKumara
Mayoorikka
2 weeks ago
அநுரவின் யாழ்ப்பாண மேடையில் சுமந்திரனும் ஏறினார்” போலிச் செய்தியின் நோக்கம் என்ன?

இலங்கையின் பிரபல சிங்கள அச்சு ஊடகமொன்று தவறாக தலைப்பிட்டு வெளியிட்ட பத்திரிகை செய்தியை மேற்கோள்காட்டி, பிரபல சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் சிங்கள மக்கள் மத்தியில் பொய்யான கருத்துக்களை பரப்பும் வகையில் செயற்பட்டுள்ளார்.

 அமைச்சர் டிரான் அலஸுக்குச் சொந்தமான, மவ்பிம (Mawbima) பத்திரிகையில் “அநுரவின் யாழ்ப்பாண மேடையில் சுமந்திரனும் ஏறினார்” (අනුර කුමාරගේ යාපනේ වේදිකාවට සුමන්තිරනුත් නඟී) என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளியயாகியிருந்தது.

 ஹிரு தொலைக்காட்சியில் (Hiru Tv) தான் தொகுத்து வழங்கும் பத்தர விஸ்ர நிகழ்ச்சியில் இந்த செய்தி குறித்து தனது விமர்சனத்தை வெளியிட்ட ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம, தேசிய மக்கள் சக்தியின் மேடையில் ஏறியதன் ஊடாக எம். ஏ. சுமந்திரன் அந்தக் கட்சியில் இணைந்துள்ளார் என்ற வகையில் கருத்து வெளியிட்டார்.

 யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற, தேசி மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க பங்கேற்ற கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், மேடையேறிதன் ஊடாக, தேசிய மக்கள் சக்தியுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டணி அமைக்கலாம் என்ற வகையிலும் அவர் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

 “TNA திசைகாட்டி புதிய கூட்டணியா? புதிய டீல் ஒன்றா? அப்படியானால், இவை நாம் பழகவதற்கு செய்யும் விடயங்கள் இல்லையா? அவை நமக்கு சாதாரண எளிய விடயங்கள். 94இல் சந்திரிகாவை கொண்டு வந்தோம், 2005ல் மஹிந்தவை கொண்டு வந்தோம், 2010இல் பொன்சேகாவுக்காக உழைத்தோம், 2015இல் மைத்திரியை கொண்டு வந்தோம், இல்லையா? இப்போது மீதி பிரபாகரன், பிரபாகரனும் இருந்திருந்தால் திசைகாட்டி மேடையில் ஏறுவார். 

இப்ராஹிம் தேசியப் பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட்டதில் சுமந்திரன் மேடையேறியமை பெரிய செய்தியல்ல.” தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதித்துறை மன்றத்தின் யாழ்ப்பாண மாவட்ட மாநாடு தொடர்பிலேயே ஊடகவியலாளர் சமுதித இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

 ஏப்ரல் 4ஆம் திகதி இடம்பெற்ற இந்த மாநாட்டில் சுமந்திரன் பங்கேற்றிருந்தபோதிலும் உரையாற்றியிருக்கவில்லை என்பதோடு மேடையேறவும் இல்லை. மேலும், ஊடகவியலாளர் லக்ஷ்மி ஜயகொடி எழுதிய “அநுரவின் யாழ்ப்பாண மேடையில் சுமந்திரனும் ஏறினார்” என்ற தலைப்பிலான செய்தியிலும், தலைப்புடன் தொடர்புடைய எவ்வித தகவலும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பதோடு, அநுர குமார திசாநாயக்கவிற்கும், எம். ஏ. சுமந்திரனுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பிலேயே அறிக்கையிடப்பட்டிருந்தது.

 எனினும் இந்த செய்தியின் உள்ளடக்கம் தொடர்பில் முழுமையாக வாசிக்காது குறித்த செய்தியின் தலைப்பினை மாத்திரம் நிகழ்ச்சியில் சேர்த்துக்கொண்ட ஊடகவியலாளர் சமுதித, சுமந்திரன் தொடர்பில் தவறான தகவலை சிங்கள மக்கள் மத்தியில் பரப்பும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.