கடன் மறுசீரமைப்பில் இருதரப்பு மறுசீரமைப்புகள் நிறைவுக் கட்டத்தில்!

#SriLanka #China
Mayoorikka
2 weeks ago
கடன் மறுசீரமைப்பில் இருதரப்பு மறுசீரமைப்புகள் நிறைவுக் கட்டத்தில்!

இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் இருதரப்பு மறுசீரமைப்புகள் அனைத்தும் எதிர்வரும் ஜுன் மாதம் இறுதிக்குள் நிறைவுப்படுத்தப்படுவதுடன், பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடனான இணக்கப்பாட்டு பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதியின் அலுவலக பிரதானியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, பிரதமர் தினேஸ் குணவர்தனவின் சீன வியத்தின் பின்னர் கடன் மறுசீரப்பு தொடர்பில் சாதகமான பதில் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 ஊடகங்களின் செய்தி பிரிவு தலைமை ஆசிரியர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

 இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் இருதரப்பு மறுசீரமைப்புகளே எஞ்சியுள்ளன. உத்தியோகப்பூர்வ கடன் வழங்குநர்கள் குழுவில் சீனாவை தவிர ஏனைய அனைத்து தரப்புளும் உள்ளன. குறிப்பாக இலங்கையின் இருதரப்பு கடன்மறுசீரமைப்புகளில் உத்தியோகப்பூர்வ கடன் வழங்குநர்கள் குழுவுடன் உத்தியோகப்பூர்வமற்ற முறையில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ள போதிலும் அவை இன்னும் உத்தியோகப்பூர்வ ஒப்பந்தங்களாக கைச்சாத்திடப்பட வில்லை.

 எனவே அந்த ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதாவது உத்தியோகப்பூர்வ கடன் வழங்குநர்கள் குழுவுடன் பொதுவானதொரு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதா? அல்லது குழுவில் உள்ள நாடுகளுடன் தனி தனியே இருதரப்பு ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவதா? என்ற தீர்மானம் குறித்தே ஆராயப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும் இந்த ஒப்பந்தம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டதன் பின்னர், தடைப்பட்டுள்ள பல விடயங்களை முன்னெடுக்க கூடியதாக இருக்கும்.

 இலங்கையின் கடன் மறுசீரமைப்புளில் மற்றுமொரு பிரிவினரான பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவை கடந்த மார்ச் மாதம் நடுப்பகுதியில் லண்டனில் சந்தித்து கலந்துரையாடினோம். இந்த கலந்துரையாடலுக்கு முன்பதாக பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழு முன்மொழிவுகள் சிலவற்றை முன்வைத்திருந்தது. 

எதிர் முன்மொழிவுகளை இலங்கை தரப்பு முன்வைத்திருந்த நிலையில் மார்ச் மாத கலந்துரையாடலுக்கு முன்பதாக பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவானது மீண்டும் முன்மொழிவுகள் சிலவற்றை முன்வைத்தது. ஆனால் இலங்கை தரப்பால் பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவில் முன்வைக்கப்பட்ட எதிர் முன்மொழிவுகள் சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடுகளுக்கு எதிரானதாக இல்லை என்ற உத்தரவாதத்தை நாணய நிதியம் வழங்கியிருந்தது. 

ஆனால் பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் மார்ச் மாதத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் பிரச்சினைக்குறிய நான்கு விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தோம். இதன் போது பிரச்சினைக்குறிய நான்கு விடயங்களில் இரு விடயங்களுக்கு இருதரப்பும் இணக்கப்பாடுடன் தீர்வை எட்டியது. 

எஞ்சிய இரு விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்பட வில்லை. எனினும் சாதகமான தீர்வை நோக்கி பேச்சுவார்த்தைகள் நகர்த்தப்படுகின்றன. எனவே பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடனான இணக்கப்பாட்டை எட்டும் காலம் சற்று தாமதிக்கலாம்.

 ஆனால் எதிர்வரும் ஜுன் மாதத்திற்குள் இணக்கப்பாட்டை எட்டவேண்டியதுள்ளது. ஏனெனில் சர்வதேச நாணய நிதியத்துடனா நிர்வாகக்குழு கூட்டத்திற்கு முன்னர் பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழு உட்பட இருதரப்பு மறுசீரமைப்புகள் அனைத்தும் நிறைவுப்படுத்தப்பட வேண்டும். எவ்வாறாயினும் இலங்கைக்கு எவ்விதமான பாதிப்புகள் ஏற்படாது. 

வொஷிங்டனில் இன்று இடம்பெறுகின்ற சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டத்தில் இந்த விடயங்கள் அனைத்தும் கவனத்தில் கொள்ளப்படும். சீனா ஒப்புதல் உத்தியோகப்பூர்வ கடன் வழங்குநர்கள் குழுவிலுள்ள இந்தியா மற்றும் ஜப்பான் இலங்கைக்கு சாதமான முறையில் இணக்கப்பாடுகளுக்கு வந்துள்ளன. ஆனால் சீனா இந்த குழுவில் இல்லை. எனவே கடன் மறுசீரமைப்பில் சீனாவுடன் தனித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டியதுள்ளது. அண்மைய சீன விஜயத்தில் பங்கேற்ற பிரதமர் தினேஷ் குணவர்தன சீன ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன் போது மிகவும் சாதமான வெளிப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.