இலங்கையின் அரசியல் எதிர்காலம் நல்லிணக்கத்தின் கையில்: இந்திய ஆய்வாளர்

#India #SriLanka #srilankan politics
Mayoorikka
1 week ago
இலங்கையின் அரசியல் எதிர்காலம்  நல்லிணக்கத்தின் கையில்: இந்திய ஆய்வாளர்

இலங்கையை பொறுத்தமட்டில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளின் எதிர்காலமானது பொருளாதார அபிவிருத்தியுடன் கூடிய நிலைமாறுகால நீதி மற்றும் நல்லிணக்க முன்னேற்றம் என்பவற்றுடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கிறது  என புதுடில்லியில் உள்ள தெற்காசிய பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை இணை பேராசிரியர் கலாநிதி நஃபீஸ் அஹமட் தெரிவித்துள்ளார்.

 தற்போதைய சூழ்நிலையில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான பரந்துபட்ட பொருளாதார அபிவிருத்தித்திட்டத்துடன் இணைந்த நல்லிணக்கம் தொடர்பான அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளை அரசாங்கம் சீரான சமநிலையில் பேணவேண்டியது மிக அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 இந்தியாவை தளமாகக்கொண்டு இயங்கிவரும் புத்திஜீவிகளில் ஒருவரான கலாநிதி நஃபீஸ் அஹமட் 'இலங்கையில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளின் எதிர்காலம்' எனும் தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

 குற்றம் செய்திருக்கக்கூடுமென சந்தேகிக்கப்படுவோர் உள்ளடங்கலாக சகலருக்குமான தனிப்பட்ட பாதுகாப்புசார் உரிமை, வாக்களிப்பதற்கும் ஜனநாயக ரீதியிலான அரசியல் செயன்முறையில் பங்கேற்பதற்குமான உரிமை, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், விரும்பிய மதம் அல்லது நம்பிக்கையை பிற்பற்றுவதற்கான உரிமை என்பன மிக முக்கிய சிவில் மற்றும் அரசியல் உரிமைகளாகும்.

 இவ்வுரிமைகள் அனைவருக்கும் உரியனவாக உறுதிப்படுத்தப்படாவிடின், அவை அவற்றின் முக்கியத்துவத்தை இழந்துவிடும். அதன்படி இலங்கையினால் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயம் உரியவாறு பின்பற்றப்படுகின்றதா என ஆராய்வதற்கான கடப்பாட்டைக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சார்ந்த இலங்கை அரசாங்கத்தின் கடந்தகால நடவடிக்கைகள் தொடர்பில் அதன் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தது.

 அண்மையகாலங்களில் இலங்கை பொருளாதார, அரசியல் மற்றும் அடிப்படை மனித உரிமைகள்சார் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துவரும் நிலையில், ஐ.நா மனித உரிமைகள் குழுவின் உலகநாடுகள் தொடர்பான அறிக்கையில் இலங்கையில் பல வருடங்களாக இடம்பெற்றுவரும் மீறல்கள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 குறிப்பாக சட்டத்துக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்களைக் கலைப்பதற்கு அதிகாரிகளால் மிகையான படைப்பலம் பிரயோகிக்கப்படல், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பயங்கரவாதத்தடைச்சட்டம் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படல், அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக பாரியளவிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்போது பொதுமக்கள் சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கப்படல் என்பன உள்ளடங்கலாக கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின்மீது கடுமையான மட்டுப்பாடுகள் பிரயோகிக்கப்பட்டிருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

 அதுமாத்திரமன்றி 2022 ஆம் ஆண்டு அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசினால் அடிக்கடி அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டதன் விளைவாக இடம்பெற்ற உயிர்ச்சேதங்கள், காயங்கள் மற்றும் வலுகட்டாய கைதுகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் குறித்தும் ஐ.நா மனித உரிமைகள் குழு அதன் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.

 அத்தோடு இலங்கையின் அரசியலமைப்பில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் நாட்டின் சட்டமுறைமை மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சுயாதீனத்துவத்தை வலுவிழக்கச்செய்திருப்பதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது. மேலும் 1983 - 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரசாங்கப்படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுடன் சம்பந்தப்பட்டவர்களைப் பொறுப்புக்கூறச்செய்வதில் நீண்டகாலமாக நிலவும் தாமதம் குறித்தும் ஐ.நா மனித உரிமைகள் குழு அதன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. 

மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்கின்ற போதிலும், போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டிருக்கும் இராணுவ அதிகாரிகள் பதவி உயர்வு பெறுகின்றனர். அதேபோன்று வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோரின் தலைவிதி என்னவென்பதைக் கண்டறிவதில் முன்னேற்றங்கள் எட்டப்படவில்லை.

 காணி அபகரிப்புக்கள், வெறுப்புணர்வுப் பேச்சுக்கள், தவறான தகவல் பரப்புரைகள், மத வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்கள் என்பன தமிழ், முஸ்லிம் சிறுபான்மையின மக்களை இலக்குவைப்பதற்குப் பயன்படுத்தப்படுவதாக ஐ.நா மனித உரிமைகள் குழு சுட்டிக்காட்டியுள்ளது. 

இவ்வாறானதொரு பின்னணியில் நாட்டில் நிலவும் ஆட்சியியல் நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு உரியவாறான தீர்வினை வழங்குவதற்கும், அனைத்து மக்களினதும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும், மிகமோசமான மீறல்களில் ஈடுபட்டோரைப் பொறுப்புக்கூறச்செய்வதற்கும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

இலங்கையைப் பொறுத்தமட்டில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளின் எதிர்காலமானது பொருளாதார அபிவிருத்தியுடன்கூடிய நிலைமாறுகால நீதி மற்றும் நல்லிணக்க முன்னேற்றம் என்பவற்றுடன் மிகநெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கின்றது. 

எனவே தற்போதைய சூழ்நிலையில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான பரந்துபட்ட பொருளாதார அபிவிருத்தித்திட்டத்துடன் இணைந்த நல்லிணக்கம் தொடர்பான அரசியல் கட்சிகளின் அக்கறைகளை அரசாங்கம் சீரான சமநிலையில் பேணுவது இன்றியமையாததாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.