இலங்கையை வந்தடைந்தார் ஈரான் ஜனாதிபதி!

#SriLanka #Iran
Mayoorikka
1 week ago
இலங்கையை வந்தடைந்தார் ஈரான் ஜனாதிபதி!

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார்.

 ஈரானுக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக மத்தல சர்வதேச விமான நிலையத்தை ஈரான் ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் வந்தடைந்துள்ளனர். பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் அவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்கான கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்ளும் நோக்கிலேயே ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். 

 ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இதன்போது கைசாத்திடப்படவுள்ளது. அம்பாந்தோட்டை மத்தல விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருகைதந்துள்ள ஈரான் ஜனாதிபதி, அங்கிருந்து உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித்திட்டத்தை திறந்துவைத்துவிட்டு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக கொழும்பை வந்தடையவுள்ளார். கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இருதரப்பு சந்திப்பை நடாத்தவுள்ள ஈரான் ஜனாதிபதி, பின்னர் நாடு திரும்பவுள்ளார்.

 ஈரானின் ஒத்துழைப்புடன் 529 மில்லியன் டொலர் பெறுமதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் உமா ஓயா பல்நோக்குத்திட்டத்தைத் திறந்துவைப்பதே ஈரானிய ஜனாதிபதியின் இலங்கைக்கான விஜயத்தின் நோக்கமாகும். உமா ஓயா பல்நோக்குத்திட்டம் 2011 ஆம் ஆண்டு ஈரானின் ஏற்றுமதி மேம்பாட்டு வங்கியின் கடனுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. 

 இருப்பினும் அதனைத்தொடர்ந்து பூகோள அரசியல், பொருளாதாரத்தடைகள் ஈரானில் தாக்கங்களை ஏற்படுத்தியதன் விளைவாக, உமா ஓயா திட்டத்துக்கான நிதி உள்நாட்டு திறைசேரி ஒதுக்கீடுகளுக்கு மாற்றப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் புஹல்பொல நீர்த்தேக்கத்திலிருந்து சேகரிக்கப்படும் நீர், 4 கிலோமீற்றர் சுரங்கப்பாதையின் ஊடாக டயரபா நீர்த்தேக்கத்துக்குச் செல்கிறது. 

 அங்கிருந்து 15.5 கிலோமீற்றர் சுரங்கப்பாதை ஊடாக எல்ல, கரந்தகொல்ல பகுதியில் உள்ள 2 நிலத்தடி விசையாழிகளுக்குச் செல்கிறது. இவ்விசையாழிகள் ஒவ்வொன்றும் 60 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதுடன், அவை தேசிய மின்கட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.