தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் மாற்றமில்லை!

#SriLanka
Mayoorikka
2 weeks ago
தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் மாற்றமில்லை!

இலங்கையில் தொடர்ந்தும் தண்டனையிலிருந்து தப்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தி வரும் அமெரிக்கா, மனித உரிமைகளை மீறிய அதிகாரிகளை இனங்கண்டு தண்டிப்பதற்கு அரசாங்கம் குறைந்தளவு நடவடிக்கைகளையே எடுத்துள்ள விடயத்தையும் சுட்டிக்காட்டியுள்ளது.

 2023ஆம் ஆண்டிற்கான இலங்கையின் மனித உரிமைகள் பதிவு குறித்த 66 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ள, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் பணியகம், கைதுகள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான கொலைகள், நாட்டில் இடம்பெற்ற சித்திரவதைகள் உட்பட பல பாரதூரமான மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தியுள்ளது.

 2020ஆம் ஆண்டு முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது போர்க் குற்றங்களுக்காக பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்காவின், தற்போதைய இலங்கைத் தூதுவர் ஜூலி சாங் அரச புத்தாண்டு நிகழ்வில் அவருடன் குழு புகைப்படத்தில் தோன்றுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 முன்னதாக 2022 இல் வெளியிடப்பட்ட அறிக்கையில், அந்த ஆண்டில் மனித உரிமைகளை மீறிய அல்லது ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகளை அடையாளம் காணவும், விசாரணை செய்யவும், வழக்குத் தொடரவும் மற்றும் தண்டிக்கவும் இலங்கை அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் மிகக் குறைவு என்றும் வலியுறுத்தப்பட்டது. இதன் காரணமாக, இந்த இரு தரப்பினரும் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கடந்த வருட அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

 அதன் நீட்சியாக, 2023ஆம் ஆண்டுக்கான அறிக்கையில், இலங்கையில் மனித உரிமைகள், தொழிலாளர் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் தொடர்பான பல சம்பவங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில், இந்த ஆண்டு பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனக் கூறும் அந்த அறிக்கையில், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 14 பாரிய புதைகுழிகளின் முடிவுகளுக்கு விசாரணைகள் இட்டுச் செல்லவில்லை எனவும், அவற்றில் பெரும்பாலானவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 கடந்த வருட இறுதியில், போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியில் இருந்து தற்செயலாக 40 எலும்புக்கூடுகள் தோண்டப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் பணிகள் ஜனாதிபதி செயலகத்தின் நிதிப் பற்றாக்குறையால் நவம்பர் மாதம் முதல் காலவரையறையின்றி முடங்கியுள்ளன. எனினும் காணாமற்போனோர் அலுவலகம் (OMP) அந்தப் பணத்தை வழங்குவதாக உறுதியளித்திருந்தது.

 "போர்க்கால துஷ்பிரயோகங்களுக்கு தண்டனையின்மை மற்றும் பொறுப்புக்கூறல் இல்லாமை ஒரு பிரச்சனையாகவே உள்ளது. யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான சம்பவங்கள் தீர்க்கப்படாமல் உள்ளன" என இராஜாங்கத் திணைக்கள அறிக்கை கூறுகிறது.

 1983-2009 உள்நாட்டுப் போரின் போது அல்லது 1988-89 கிளர்ச்சியின் போது துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் இந்த ஆண்டு சிறிதளவு முன்னேற்றமே ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அறிக்கை, இது தொடர்பிலான விசாரணைகளில் முன்னேற்றம் காணப்படாததாலும், அரசாங்கத்திலிருந்தோ அல்லது காணாமல் போனோர் குறித்த அலுவலகத்திலிருந்தோ எந்தவித பதிலும் கிடைக்காததாலும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி வருவதாகவும் வலியுறுத்தியுள்ளது.

 யுத்தத்தின்போது அரச பாதுகாப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டும், , யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களின் கதி என்னவென்பதை வெளிப்படுத்துமாறு கோரி வடக்கு, கிழக்கில் தமிழ் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 2,600 நாட்களைக் கடந்துள்ளது. "விசேடமாக அரசாங்க அதிகாரிகள், இராணுவம், துணை இராணுவப் படைகள், பொலிஸ் மற்றும் பிற பாதுகாப்புப் படைகளுடன் தொடர்புடைய துஷ்பிரயோகங்களுக்கு, நிறுவப்பட்ட தண்டனையிலிருந்து விடுபடுவது ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினையாக உள்ளது" என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

 சிவில் சமூக அமைப்புகளை மேற்கோள் காட்டி, துஷ்பிரயோகங்களுக்கு காரணமானவர்கள் என குற்றம் சாட்டப்படும் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக நீதித்துறையும் அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. "வடக்கில் சில தமிழர்கள் சட்டவிரோதமாக பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாகவும், விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டதற்காக அல்லது போராட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றதற்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிவில் சமூக அமைப்புகள் இந்த ஆண்டு அறிக்கையிட்டுள்ளன."

 தடுப்புக்காவலில் மனித உரிமை மீறல்கள் குறித்தும் கவனம் செலுத்தும் இந்த அறிக்கை, வட்டுக்கோட்டை பொலிஸ் காவலில் இறந்த நாகராசா அலெக்ஸ் வழக்கை குறிப்பாகக் குறிப்பிடுகிறது. “அலெக்ஸ் நவம்பர் 16 அன்று பொலிஸ் சித்திரவதையால் ஏற்பட்ட காயங்களுக்காக வைத்தியயசாலையில் அனுமதிக்கப்பட்டார். சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட ஒரு காணொளி நேர்காணலின் போது பொலிஸாரின் சித்திரவதைகளை அலெக்ஸ் விபரிக்கின்றார். நவம்பர் 19 அன்று, பொலிஸார் அலெக்ஸை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மீண்டும் அழைத்துச் சென்றனர், அப்போது வைத்தியசாலை ஊழியர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.”

 நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான லொஹான் ரத்வத்த 2021ஆம் ஆண்டு இரண்டு சிறைச்சாலைகளுக்குள் பலவந்தமாக நுழைந்தமை மற்றும் அநுராதபுரத்தில் தமிழ் கைதிகளுக்கு கைத்துப்பாக்கியை காட்டி கொலை அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் நீதியமைச்சினால் பகிரங்கப்படுத்தப்பட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி, அமெரிக்க இராஜாங்க திணைக்களம், கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய ரத்வத்தவிற்கு எதிராக கொலை முயற்சி குற்றச்சாட்டை சுமத்துவது உள்ளிட்ட ஆறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்ட விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது. அந்த பரிந்துரைகள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்ட போதிலும், அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வருட ஆரம்பத்தில் பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

 சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் நிலைமைத் தொடர்பில் அவதானம் செலுத்தும் இந்த அறிக்கை, கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாத இறுதியில், 1,065 பெண்கள் உட்பட 28,551 கைதிகள் மற்றும் சந்தேகநபர்கள், 13,241 பேர் தடுத்து வைக்கப்படக்கூடிய தற்போதுள்ள சிறை அமைப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. "ஒரு கைதிக்காக ஒதுக்கப்பட்ட அறைகளில் பெரும்பாலும் மூன்று அல்லது நான்கு பேர் இருப்பார்கள், சில சமயங்களில் கைதிகளுக்கு தூங்கும் இடம் மற்றும் போதுமான சுகாதாரம் இல்லை."

 இங்குள்ள கைதிகளில் சுமார் மூன்றில் இரண்டு பங்கினர் விசாரணை நிலுவையில் உள்ள குற்றம் சாட்டப்பட்டவர்கள். பிணை வழங்க இயலாமை, நீண்ட சட்ட நடைமுறைகள், நீதித்துறையின் திறமையின்மை மற்றும் ஊழல் ஆகியவை பெரும்பாலும் விசாரணைக்கு முன்னரான கைதிகளின் விடுதலையை தாமதப்படுத்துகின்றன. இவ்வாறு வழக்கு விசாரணைக்கு முன்னரான தடுப்புக் காவலின் காலம், இலங்கையில் குற்றத்திற்கு சமமானதாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ தண்டனை வழங்கப்படுவது வழமையான விடயம் என அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

 மேலும், அந்த ஆண்டு ஜனவரி 18 அன்று, புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியதோடு, இது போதைப்பொருள் புனர்வாழ்வு திட்டங்களை மேற்பார்வையிட ஒரு அரசாங்க நிறுவனத்தை நிறுவியது மற்றும் புதிய சிகிச்சை வசதிகளை உருவாக்க அரசாங்கத்தை அனுமதித்தது. ஆனால் இந்த புதிய சட்டங்களை ஒக்டோபர் இறுதியில் கூட அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை என அறிக்கை காட்டுகிறது.

 இலங்கைச் சட்டம் தன்னிச்சையான கைது மற்றும் காவலில் வைப்பதைத் தடைசெய்வதோடு, எந்தவொரு நபருக்கும் தான் கைது செய்யப்பட்டமை அல்லது நீதிமன்றில் தடுத்துவைக்கப்பட்டமை குறித்த சட்டப்பூர்வத்தன்மையை சவாலுக்கு உட்படுத்தும் உரிமை இருந்தாலும், அரசாங்கம் பொதுவாக இந்த சட்டத் தேவைகளைப் பின்பற்றவில்லை என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குறிப்பிடுகிறது. 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கான தடை நடைமுறைக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், குறைந்தது 15 பேர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 கொல்லப்பட்ட விடுதலைப் புலிப் போராளிகளை நினைவுகூரும் வருடாந்த நிகழ்வான மாவீரர் தினத்தில் பங்கேற்றபோது, புலிகளின் மகிமைப்படுத்தும் வகையில் சட்டவிரோத சின்னங்கள் அல்லது படங்களைப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் நவம்பர் மாதம் கைது செய்யப்பட்ட ஒன்பது தமிழ் பிரஜைகளும் இதில் அடங்குவர்.

 இந்திய இராணுவத்திற்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த திலீபனை நினைவுகூர்ந்து ஊர்வலத்தில் ஈடுபட்டிருந்த, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது, திருகோணமலை மாவட்டத்தில் சிங்களக் கும்பல் தாக்குதல் நடத்திய நிலையில், அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜூன் மாதம் கொழும்பில் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளிப்பதற்காக வந்த போது கைது செய்யப்பட்டமை ஆகிய விடயங்கள் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மே 18 அன்று, பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நான்கு முஸ்லிம்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ததோடு, அவர்கள் அனைவரும் சுமார் 22 மாதங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த முஸ்லிம் மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவாக சாட்சியமளித்தவர்களாவர்.

 மேலும், பயங்கரவாத தடைச் சட்டம், நீதித்துறை அல்லது பிற அங்கீகாரம் இல்லாமல் அரச அதிகாரிகள் வீடுகளுக்குள் நுழைந்து தகவல் தொடர்புகளை கண்காணிக்க அனுமதிப்பதோடு, அரசாங்க அதிகாரிகள் அனுமதியின்றி மக்களின் நடத்தையை கண்காணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெறுப்பு பேச்சுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதில் ஏனைய குழுக்களை விட முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்களை இலங்கை அரசாங்கம் அனுமதிப்பதாக அறிக்கை குற்றஞ்சாட்டுகிறது. 

அத்துடன், கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவதற்காக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையை (ICCPR) இலங்கை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்தியதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் (OHCHR) வெளியிட்டுள்ள அறிக்கை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பில் அவதானம் செலுத்தும் குறித்த அறிக்கை, இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க அரசாங்கம் தாமதமாகி வருவதாகவும், உயர் பாதுகாப்பு வலயங்களால் பாதிக்கப்பட்ட பலர், இராணுவ நலன்களுக்காக பொருளாதார ரீதியில் பெறுமதிமிக்கதாக கருதும் காணிகளை இராணுவம் தொடர்ந்தும் வைத்திருப்பதாக குற்றம் சுமத்ததுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

 "சில இந்து மற்றும் முஸ்லீம் குழுக்கள் பௌத்த தேரர்கள் புத்தர் சிலை அல்லது அரச மரத்தை தங்கள் சொத்தில் நிறுவினால், அவர்கள் நீண்ட காலமாக ஆக்கிரமித்திருந்த நிலத்தை உத்தியோகபூர்வமாக உரிமை கோருவது கடினம் எனக் கூறியுள்ளதோடு, வடக்கின் சிறுபான்மை மக்களை நீர்த்துப்போகச் செய்யும் "காலனித்துவ" திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகளை அவர்கள் விபரித்துள்ளனர். 

 இதேவேளை, மலையகத் தமிழர்களும், வடக்கு, கிழக்குத் தமிழர்களும் பல்கலைக்கழகக் கல்வி, அரச வேலைகள், வீடுகள், சுகாதாரச் சேவைகள், மொழிச் சட்டங்கள் போன்றவற்றில் நீண்டகால மற்றும் முறையான பாகுபாடுகளுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அமெரிக்க அமெரிக்க, இராஜாங்க திணைக்களத்தின், ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் பணியகம் அதன் 2023 அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.