‘2022’ குளிர்கால ஒலிம்பிக்கை ஆஸ்திரேலியா புறக்கணிப்பு!

Prasuat month ago

சீன தலைநகர் பீஜிங்கில் அடுத்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. சீனாவில் இன சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களை கண்டித்து ஒலிம்பிக் போட்டிகளை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என மனித உரிமை சங்கங்கள் உலக நாடுகளை கேட்டு கொண்டிருந்த நிலையில், பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்தது. 

சீனாவின் மேற்கு பகுதியான சின்ஜியாங்கில் நடந்த சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை உள்ளிட்ட மனித உரிமை மீறல்களை முன்னிறுத்தி இந்த முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அமெரிக்காவுடன் இணைந்து  ஆஸ்திரேலியாவும் பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை  தூதரக ரீதியில் புறக்கணிக்க உள்ளது.

சீனாவுடனான ஆஸ்திரேலியாவின் உறவு சில வருடங்களாகவே முறிவை கண்டுள்ள நிலையில் இந்த முடிவு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தாது.

ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு முயற்சிகளை சீனா கடுமையாக விமர்சித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுவதற்கான எங்கள் முடிவை சீனா சாடியுள்ளது”

இவ்வாறு அவர் கூறினார்.

ஆஸ்திரேலியாவின் இந்த அறிவிப்பின் மூலம், பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பார்கள். ஆனால், ஒலிம்பிக் சார்ந்த நிகழ்ச்சிகளில், எந்த அதிகாரியையும் ஆஸ்திரேலியா அனுப்பி வைக்காது.

ஆஸ்திரேலியாவின் ஒலிம்பிக் சங்க முதன்மை அதிகாரி தெரிவித்துள்ளதாவது,  “சீனாவுக்கு எங்கள் நாட்டு வீரர்களை பத்திரமாக கொண்டுசென்று திரும்ப அழைத்து வருவது சவாலான விஷயம்.

எங்கள் நாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு பதக்கங்களை குவிக்க கடுமையாக பயிற்சி பெற்று வருகின்றனர். எங்கள் அதிகாரத்திட்குட்பட்டு அவர்களுக்கு முடிந்த அளவு ஆதரவை வழங்குவோம்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், தங்கள் நாட்டு அரசு அதிகாரிகளை சீனாவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்பப் போவதில்லை என்று நியூசிலாந்து அரசு தரப்பில் தெரிவித்துள்ளது.கொரோனா மற்றும் அமெரிக்காவின் இந்த முடிவை மேற்கோள் காட்டி நியூசிலாந்து அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

கனடா,ஜப்பன் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளும் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் இந்த முடிவு குறித்து பரிசீலித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.