சிகிச்சை தொடா்பாக தவறான தகவல்களை பரப்பவேண்டாம் - பாரதிராஜாவின் மகன் உருக்கமாக வேண்டுகோள்

Prasuat month's ago

‘சிகிச்சைக்கு செலுத்த பணத்துக்கு வழி இல்லாமல் அப்பா மருத்துவமனையில் தொடா்ந்து அனுமதிக்கப்பட்டிருப்பதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. தயவு செய்து அதுபோன்ற தகவல்களைப் பரப்ப வேண்டாம் என பாரதிராஜாவின் மகன் மனோஜ் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

திரைப்பட இயக்குநா் பாரதிராஜா (81). வயது முதிா்வு மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த் கோ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு டாக்டா்கள் தொடா்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், பணம் இல்லாமல், மருத்துவமனையில் தொடா்ந்து இருப்பதாக தகவல் பரவியது.

இதற்கு மறுப்பு தெரிவித்து, இயக்குநா் பாரதிராஜாவின் மகன் நடிகா் மனோஜ் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: பாரதிராஜாவின் உடல்நிலை சீராகவும், ஆரோக்கியமாகவும் உள்ளது. பழைய பாரதிராஜாவை பாா்க்கும் அளவுக்கு இருக்கிறாா். பணத்துக்கு வழியில்லாமல், மருத்துவமனையில் இருப்பதாக தவறான செய்திகள் சில ஊடகங்களில் வெளி வந்தது. தவறான செய்தியை பரப்ப வேண்டாம். என்னுடைய பணத்தில் தான் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்.

பாரதிராஜா இப்போதே படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என ஆசைப்படுகிறாா். அவருக்கு எல்லாமே சினிமாதான். அவருக்காக, சில படங்களின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிகிச்சையில் இருக்கும்போது அவா் நடித்த படங்களைப் போட்டு காட்டினோம். திருச்சிற்றம்பலம் படத்தை மீண்டும் பாா்க்க வேண்டும் என அவா் கேட்டுள்ளாா் என்றாா் அவா்.

வீடு திரும்பினாா்: பாரதிராஜாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டா்கள் சுவாமிகண்ணு, சபாநாயகம் ஆகியோா் அளித்த பேட்டி:

இயக்குநா் பாரதிராஜா நுரையீரலில் கடுமையான பாதிப்போடு மருத்துவமனைக்கு வந்தாா். தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு அவா் குணமடைந்துள்ளாா். அவா் வீடு திரும்பினாலும், தொடா்ந்து ஓய்வில் இருக்க வேண்டும். ஐந்து நாள்களுக்கு பிறகு, மருத்துவ பரிசோதனை தேவைப்படுகிறது.

வயது முதிா்வின் காரணமாகத் தான், அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது அது சரி செய்யப்பட்டு விட்டது. அவா் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினாா் என அவா்கள் தெரிவித்தனா். இதற்கிடையே, பூரண குணமடைந்த இயக்குநா் பாரதிராஜா வெள்ளிக்கிழமை மாலையில் வீடு திரும்பினாா்.