ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த 34 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்துள்ள ஈரான்

ஈரானில் கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப்பை முறையாக அணியவில்லை என்ற குற்றசாட்டில் ஆடை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாஷா சுமினி என்ற இளம் பெண் போலீஸ் காவலில் உயிரிழந்ததை எதிர்த்து நாடு முழுவதும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை கலைக்க ஈரான் பாதுகாப்பு படையினர் எடுத்த கடும் நடவடிக்கையால் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட சிலருக்கு மரண தண்டனை விதித்து தூக்கிலிடபட்டது. ஈரானின் இந்த நடவடிக்கைக்கு பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் ஈரானை கண்டிக்கும் வகையில் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன், ஈரான் மீது கடுமையான பொருளாதார தடை விதித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த 34 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது ஈரான் பொருளாதார தடை விதித்துள்ளது.
இந்த தடையில் ஈரான் வங்கி கணக்குகளில் பணம் செலுத்த தடை, விசா வழங்க தடை மற்றும் ஈரானுக்குள் நுழைவதற்கு தடை ஆகியவை அடங்கும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ஈரான் உள்நாட்டு விவகாரங்களில், வெளிநாடுகள் தலையிடுவது கண்டிக்கத்தக்கது என ஈரான் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள், இராசிபலன்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எமது வட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். குழுவில் இணைய இங்கே கிளிக் பண்ணவும்..