ஜெய்சங்கரின் இலங்கை பயணம் மூலோபாய உறவுகளை பலப்படுத்த உதவியுள்ளது!

#Sri Lanka #Sri Lanka President #India
Amuthuat month's ago

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் இலங்கை பயணம், மூலோபாய உறவுகளை பலப்படுத்த உதவியுள்ளதாக உலக சோஸலிஷ செய்தித்தளம் தெரிவித்துள்ளது.

ஜெய்சங்கர், ஜனவரி 18ஆம் திகதியன்று மாலைதீவுக்கான பயணத்தைத் தொடர்ந்து, இரண்டு நாட்கள் இலங்கைக்கும் பயணம் மேற்கொண்டார். 

இந்தநிலையில் சீனாவிற்கு எதிரான இராணுவ தயாரிப்பில் வோஷிங்டனின் மூலோபாய பிராந்திய பங்காளியான இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுடனான அதன் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தி வருகிறது. 

இந்த இரண்டு  நாடுகளும் இந்தியப் பெருங்கடலில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ளமை காரணமாகவே இந்தியாவும், அமெரிக்காவும் இரண்டு நாடுகளுடனும் உறவுகளை பலப்படுத்தி வருவதாக சோஸலிஷ செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.

ஜெய்சங்கர் மாலத்தீவு ஜனாதிபதி இப்ராகிம் சோலி மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் ஆகியோரை சந்தித்து பேசினார். 

சீன-சார்பு ஜனாதிபதி அப்துல்லா யாமீனை எதிர்க்க வோஷிங்டன் மற்றும் புதுடில்லியால் திட்டமிடப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையின் மூலம் சோலி 2018 இன் பிற்பகுதியில் ஆட்சிக்கு கொண்டு வரப்பட்டார்.

அதன் பின்னர் தொடர்ச்சியான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மற்றும் முதலீடுகள் மூலம் இந்தியா மாலத்தீவில் தனது செல்வாக்கை வேகமாக உயர்த்தியுள்ளது என்று சோஸலிஷ செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.
  
இந்தநிலையில் இலங்கையின் பாரதூரமான பொருளாதார நெருக்கடியை இந்திய அரசாங்கம் தனது அரசியல் செல்வாக்கை வலுப்படுத்த பயன்படுத்தியுள்ளது என்றும் அந்த செய்தித்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் வோஷிங்டனின் ஆதரவுடன் புதுடில்லி, பீய்ஜிங்குடனான கொழும்பின் உறவுகளை முறித்துக் கொள்வதில் உறுதியாக உள்ளது.

இதன் ஒரு கட்டமாக 2021 டிசம்பரில், இந்தியாவின் ஆட்சேபனைகளைத் தொடர்ந்து, தென்னிந்தியக் கடற்கரையிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள யாழ்ப்பாண தீபகற்பத்தின் 3 புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டத்தின் கட்டுமானப் பணியை சீனா நிறுத்திக்கொண்டதையும் சோஸலிஷ செய்தித்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.