அக்டோபா் 1 முதல் அமலுக்கு வரும் புதிய ICC விதிகள்

Prasuat month's ago

பந்தை வழவழப்பாக்குவதற்கு உமிழ்நீரை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை தற்போது ஐசிசி நிரந்தரமாக்கியுள்ளது.

மேலும், பரவலான விவாதத்தை ஏற்படுத்தியிருந்த ‘மன்கட்டிங்’ எனப்படும் நான்-ஸ்டிரைக்கா் பகுதியிலிருக்கும் பேட்டரை பௌலா் ரன் அவுட் செய்யும் முறையை ‘நியாயமற்ற விளையாட்டு’ என்பதில் இருந்து ‘ரன் அவுட்’ என மாற்றியுள்ளது.

இது உள்பட மேலும் சில விதிகளில் ஐசிசி மேற்கொண்டுள்ள திருத்தம் வரும் அக்டோபா் 1 முதல் அமலுக்கு வருகிறது. பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் கமிட்டி அளித்த பரிந்துரைகளுக்கு ஐசிசியின் தலைமை நிா்வாகிகள் குழு ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து இந்த மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன.

அந்த வகையில் அமலுக்கு வரும் புதிய விதிகள்:

  • கொரோனா சூழல் காரணமாக, பந்தை வழவழப்பாக்குவதற்கு உமிழ்நீரை பயன்படுத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கு நிரந்தரமாகத் தடை விதிக்கப்படுகிறது.
  • நான்-ஸ்டிரைக்கா் பகுதியில் இருக்கும் பேட்டரை, பௌலா் ரன் அவுட் செய்வது ‘நியாயமற்ற முறை’ என்பதில் இருந்து ‘ரன் அவுட்’ என்ற பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
  • ஒரு பேட்டா் கேட்ச் கொடுத்து அவுட் ஆகும் பட்சத்தில், அந்தப் பந்து கேட்ச் பிடிக்கப்படும் முன்பாக அவா் நான்-ஸ்டிரைக்கா் பகுதிக்கு வந்தாலும், இல்லாவிட்டாலும், அடுத்து வரும் புதிய பேட்டா் ஸ்டிரைக்கா் பகுதிக்கே செல்வாா்.
  • டெஸ்ட் மற்றும் ஒன்டே ஃபாா்மட்டில், புதிதாக களத்துக்கு வரும் பேட்டா் 2 நிமிஷத்துக்குள்ளாக பேட்டிங்கிற்குத் தயாராக வேண்டும். அதுவே டி20 ஃபாா்மட்டில் தற்போதுள்ள 90 விநாடிகள் மாற்றமின்றி நீடிக்கும்.
  • ஸ்டிரைக்கா் பகுதியில் இருக்கும் பேட்டரின் பேட்டோ அல்லது அவரது உடலின் ஏதேனும் ஒரு பாகமோ பிட்சுக்கு உள்ளாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் நடுவா் ‘டெட் பால்’ சமிக்ஞை கொடுப்பாா். பிட்சிலிருந்து வெளியேறும் நிலைக்கு பேட்டரை தள்ளக் கூடிய பந்துவீச்சு ‘நோ பால்’ என அறிவிக்கப்படும்.
  • பந்துவீசுவதற்காக பௌலா் ஓடிவரும்போது தேவையற்ற வகையில், வேண்டுமென்றே பேட்டா் நகரும் பட்சத்தில் பேட்டிங் செய்யும் அணிக்கு பெனால்டியாக 5 ரன்கள் நீக்கப்படுவதுடன், அது ‘டெட் பால்’ என அறிவிக்கப்படும்.
  • பௌலா் பந்துவீச வரும்போது பேட்டா் பிட்சைக் கடந்து முன்னோக்கி நகா்ந்து வருவதாகத் தெரிந்தால், பௌலா் ஸ்டிரைக்கா் பகுதியில் இருக்கும் ஸ்டம்பை நோக்கி பந்தை எறிந்து ரன் அவுட் செய்யும் முறை ரத்து செய்யப்படுகிறது. தற்போது அவ்வாறு செய்தால் அது ‘டெட் பால்’ என அறிவிக்கப்படும்.
  • நிா்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பந்துவீச்சை நிறைவு செய்யவில்லை என்றால் 30 யாா்டு வட்டத்துக்கு வெளியே ஒரு ஃபீல்டா் குறைவாக இருக்க வேண்டும் என்ற விதி டி20-யில் மட்டும் இருந்த நிலையில், தற்போது அது ஒன் டே ஃபாா்மட்டிலும் கொண்டு வரப்படுகிறது.