லீக்ஸ் - மருத்துவ குணங்கள்
கறிவேப்பிலையும் கொத்தமல்லியும் இல்லாத நம்மூர் சமையல் எப்படி மணப்பதில்லையோ, ருசிப்பதில்லையோ, அப்படித்தான் லீக்ஸ் மற்றும் செலரி இல்லாத வெளிநாட்டு சமையலும். உங்களில் பலருக்கும் லீக்ஸ் மற்றும் செலரி எப்படி இருக்கும் என்றோ, அவற்றின் உபயோகமோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
லீக்ஸ் மற்றும் செலரி சேர்த்த சூப்பையும், ஃப்ரைடு ரைஸையும் ஒருமுறை ருசித்தவர்கள், அடுத்தமுறை அவை இல்லாமல் பரிமாறப்படுகிற ரெஸ்டாரன்ட் உணவுகளின் மேல் கோபம் கொள்வார்கள். இந்த இரண்டுக்கும் அப்படியோர் மகத்தான சக்தி உண்டு. இரண்டுக்குமே தனித்தனி சுவையும், மணமும், பிரத்யேக மருத்துவ குணங்களும் உண்டு.
“வெங்காயம், பூண்டு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கீரைதான் லீக்ஸ்….
லீக்ஸ் அரிய குணங்கள்.
லீக்ஸில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ், தாதுச்சத்துகள் மற்றும் வைட்டமின்கள் உள்ளது நிரூபிக்கப்பட்ட உண்மை.
லீக்ஸில் கலோரிகள் குறைவு.
இதன் நீளமான தண்டுப் பகுதி அபரிமிதமான நார்ச்சத்தைக் கொண்டது. பூண்டில் உள்ள அளவுக்கு லீக்ஸில் Thio sulfinites குறைவுதான்.
ஆனாலும் லீக்ஸில் diallyl disulfide, diallyl trisulfide, allyl propyl disulfide போன்ற ஆன்ட்டிஆக்சிடென்ட்டுகள் அபரிமிதமான அளவில் உள்ளதால் இது பூண்டைவிடவும் சிறப்பானது. ஆரோக்கியமானது.
லீக்ஸில் உள்ள Allicin கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
அது ஆன்ட்டி பாக்டீரியல், ஆன்ட்டி ஃபங்கல் மற்றும் ஆன்ட்டி வைரல் தன்மைகளையும் கொண்டது. இந்த அலிசினுக்கு ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கும் தன்மை உண்டு. ரத்தக் குழாய்களில் ரத்தம் உறைவதைத் தடுக்கக்கூடியது.
ஆக, CAD ( coronary artery disease) மற்றும் PVD (peripheral vascular diseases ) என இதயத்தைப் பாதிக்கிற இரண்டு முக்கிய பிரச்னைகளின் தீவிரத்தையும் குறைக்கக் கூடியது இது. அதன் மூலம் பக்கவாத பாதிப்பும் குறைகிறது.
இதயத்துக்கு இதமான ஃபோலேட் என்கிற வைட்டமின் பியை அதிகம் கொண்டது லீக்ஸ். டி.என்.ஏ தொகுப்புக்கும், செல்களின் பகுப்புக்கும் அத்தியாவசியம்ஆனது ஃபோலிக் அமிலம். இது கர்ப்பிணிகளுக்குப் போதுமான அளவு இருந்தால்தான், பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
லீக்ஸில் இந்த அமிலம் அதிகமுள்ளது என்பதால் கர்ப்பிணிகள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பாலிஃபெனால் என்கிற இன்னொரு முக்கியமான ஆன்ட்டி ஆக்சிடென்ட்டையும் கொண்டது லீக்ஸ். இந்த பாலிஃபெனால்தான், ரத்த நாளங்களைப் பாதுகாத்து, இதயக் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது.
இந்த பாலிஃபெனாலுக்கு இன்னொரு சக்தியும் உண்டு. அதாவது, ஆக்சிஜனேற்ற அழுத்த நிலை மற்றும் நாள்பட்ட குறைந்த அளவிலான வீக்கம் போன்றவற்றால் ஏற்படக்கூடிய பருமன், டைப் 2 நீரிழிவு, சுவாசப்பாதை ஒவ்வாமை போன்றவற்றைக் கட்டுப்படுத்தக்கூடியது.
லீக்ஸை வைட்டமின்களின் பெட்டகம் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு நியாசின், ரிபோஃப்ளேவின், தயாமின் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது இது. லீக்ஸில் எக்கச்சக்கமான வைட்டமின் ஏ சத்து உள்ளதென்பதையும் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கரோட்டின், xanthin, lutein, வைட்டமின் சி, கே, ஈ போன்றவையும் இதில் அதிகம். பெருங்குடல் புற்றுநோய்க்குக் காரணமான விஷயங்களைக்
கட்டுப்படுத்தும் ஆற்றலும் லீக்ஸுக்கு உண்டாம். லீக்ஸில் வைட்டமின் சி சத்தும் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளதால், ரத்தசோகை பிரச்னை வராமல் தடுக்கப்படும்.
மூட்டுவலி, கீல்வாதம், சிறுநீர்பாதை வீக்கம் போன்றவற்றுக்கு லீக்ஸின் சாறு மிகச் சிறந்த மருந்தாகிறது.வெங்காயம் மற்றும் பூண்டுக்கு பாலியல் இச்சையை அதிகரிக்கச் செய்கிற தன்மை உண்டென காலம் காலமாக சொல்லப்படுவதைப் போலவே, லீக்ஸுக்கும் அந்தக் குணம் உண்டு. லீக்ஸில் நார்ச்சத்து மிக அதிகம். தவிர, அது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை பெருக்கக்கூடியதும்கூட. எனவே, செரிமானத்தை சீராக்கி, வயிற்று உப்புசத்தை குணப்படுத்தக்கூடியது இது.
நரம்பு மண்டலத்தின் சீரான இயக்கத்துக்கு மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் ஃபோலேட் ஆகிய மூன்றும் மிக முக்கியம். குறிப்பாக ஃபோலேட் என்பது குழந்தைகளின் ஆரோக்கியமான மூளை வளர்ச்சியுடன் சம்பந்தப்பட்டது. இவை அனைத்தும் லீக்ஸில் உள்ளன. லீக்ஸின் சாற்றுக்கு குடலை சுத்தப்படுத்தும் தன்மை உண்டு.
அதனால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி விடும். குடல் சுத்தமாவதாலும் அதிகளவு வைட்டமின் சி கொண்டதாலும் லீக்ஸ் எடுத்துக் கொள்கிறவர்களுக்கு சரும ஆரோக்கியமும், அழகும் மேம்படுகிறது. சூரியனின் புறஊதாக் கதிர்களின் பாதிப்பில் இருந்தும் சருமம் காப்பாற்றப்படும். லீக்ஸில் உள்ள மாங்கனீசு, இரும்பு மற்றும் இதர வைட்டமின்கள் கூந்தலின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.
யாருக்குக் கூடாது?
லீக்ஸில் மிகக் குறைந்த அளவு ஆக்சலேட் உள்ளதால் சிறுநீரகத்தில் ஆக்சலேட் கல் பிரச்னை உள்ளவர்கள் தவிர்ப்பது பாதுகாப்பானது. இதில் நிக்கல் அளவும் அதிகம் என்பதால் நிக்கல் அலர்ஜி உள்ளவர்களும் தவிர்க்க வேண்டும்.
எப்படி உபயோகிப்பது?
லீக்ஸின் மேல்புற பசுமைப் பகுதியையும், கடினமான இலைகளையும் வெட்டி விடவும். விருப்பப்படுபவர்கள் இந்தப் பகுதியையும் லேசாக வதக்கி, வெஜிடபுள் ஸ்டாக் செய்யும் போது சேர்த்துக் கொள்ளலாம். வேர்ப்பகுதியையும் வெட்டி விடவும். தண்டுப் பகுதியை நீளமாக நறுக்கவும். அதன் இதழ்களைப் பிரித்து, குழாய் தண்ணீரின் அடியில் காட்டி சுத்தப்படுத்தவும். பிறகு தண்டுப் பகுதியை வட்டமான சிறிய வில்லைகளாக நறுக்கவும்.
5 நிமிடங்கள் வைத்திருந்து பிறகு சமையலுக்கு உபயோகிக்கவும். லீக்ஸை பச்சையாக அப்படியே சாலட்டில் சேர்க்கலாம்.வேக வைத்தால் இது மென்மையாகவும் சற்றே தணிந்த மணத்துடனும் மாறும். அந்தச் சுவை பிடிப்பவர்கள் வேக வைத்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.வதக்கினால் நறுக்கென்ற சுவையைப் பெறும். துருக்கிய சமையலில் லீக்ஸை வேறு விதமாக உபயோகிக்கிறார்கள்.
இதை சற்றே கனமான துண்டுகளாக வெட்டி, வேக வைத்து, பிறகு இலைகளைத் தனியே பிரித்து அதனுள் சாதம், மூலிகைகள், வெங்காயம் மற்றும் மிளகு போன்றவற்றை ஸ்டஃப் செய்து உண்பார்கள். ஆலிவ் ஆயிலுடன் லீக்ஸ்… இறைச்சியுடன் லீக்ஸ்… என அவர்களது காம்பினேஷனும் கற்பனை வளமும் வித்தியாசமானது.