நூற்றாண்டு பிறந்தநாளை கொண்டாடும் நாயகர் என்.சங்கரய்யா

Nila
3 years ago
நூற்றாண்டு பிறந்தநாளை கொண்டாடும் நாயகர் என்.சங்கரய்யா

விடுதலை போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யா, இன்று 100ஆவது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். கம்யூனிசமும், போராட்டமும், சிறை வாழ்க்கையுமாக நூற்றாண்டை அவர் கடந்து வந்திருக்கிறார்.

இடதுசாரி இயக்கத்தில் என்.எஸ் என்று அன்போடு அழைக்கப்படுபவர் என். சங்கரய்யா. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசை அழைத்துவந்து விடுதலை வேட்கையை தூண்டியவர். உணர்வு பொங்கும் பேச்சு, ஆவேசமும், உண்மையும் தெறிக்கும் உரை, தொழிலாளர் உரிமைக்கான குரல்... இதுதான் என்.சங்கரய்யாவின் அடையாளம். விடுதலைபோராட்ட காலத்தில், அடிமைப்பட்டுக்கிடந்த தேசத்தின் நிலையும், உழைப்புச்சுரண்டலையும் கண்டு மனம் பொங்கிய சங்கரய்யா, கல்லூரி படிப்பை முடிக்க முடியாமல் போராட்ட வாழ்க்கையை தொடர்ந்தார்.

ராஜாஜி முதல்வராக இருந்தபோது சட்டமன்றத்தில் உயர்நிலைப்பள்ளிகளில் இந்தியை கட்டாயப் பாடமாக்கும் சட்டத்தை இயற்றினார். இதனை எதிர்த்து 1938-ம் ஆண்டு இந்தி திணிப்பு போராட்டம் நடத்தியவர் சங்கரய்யா. 1939 ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நுழைவு போராட்டத்தை நடத்தியவர். 1941-ல் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்டத்தால் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடத்தியும், மொழிவாரி மாநிலமாக பிரித்தபோது தமிழகத்திற்காகவும் குரல் கொடுத்தவர்.

1943-ல் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்றார். 1964-ல் மார்க்சிஸ்ட் கட்சியில் செயல்பட தொடங்கிய அவர், பொதுவுடைமை இயக்கம் நெருக்கடிகளைச் சந்தித்தபோது இயக்கத்தை விட்டு வெளியே வராமல், மார்க்சிய கருத்தில் இப்போதுவரை உறுதி காட்டிவருகிறார்.

1997 ல் மதுரையில் தீண்டாமை ஒழிப்பு மாநாடும், 1998-ல் கோவையில் மத நல்லிணக்க பேரணியையும் நடத்தினார். வாழ்நாளில் 8 ஆண்டுகள் சிறை வாழ்க்கையும், 3 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த அவர் 3 முறை மதுரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

சிறை வாழ்க்கையில் முன்னாள் முதல்வர் காமராஜர், முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன் உடன் நட்பு கொண்டவர். சென்னை மாகாணத்தின் அந்நாள் முதல்வர் ராஜாஜி முதல் தமிழ்நாட்டின் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை அனைத்து தலைவர்களிடம் நெருக்கம் கொண்டவர். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர் உடன் நெருக்கமாக இருந்தாலும் மக்கள் பிரச்னைக்காகவே பேசி இருக்கிறார்.

மதச்சார்பின்மையை பாதுகாத்தல், இடதுசாரிகளின் ஒற்றுமை என இப்போதுவரை தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டு நாயகருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!