இந்தியாவின் சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் தேர்வு - பொறுப்பேற்ற இரு மாதத்திலேயே அசத்தல்.
இந்தியாவின் சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் தேர்வு! 'ஓர்மாக்ஸ்' என்ற தனியார் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் இந்திய மாநிலங்களில் உள்ள முதல்வரின் செயல்பாடுகளை ஆய்வு செய்து அவர்களில் யார் சிறந்த மாநில முதல்வர்? என்று பட்டியலிட்டு வருகிறது. இதன் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் 'ஓர்மாக்ஸ்' நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது.
இந்த ஆய்வுகளின் முடிவில் இந்தியாவின் தலைசிறந்த முதல்வராக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மு.க.ஸ்டாலின் 68 சதவீதம் மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், தி.மு.க. எம்.எல்.ஏ.வும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னையில் நடந்த விழாவில் இதனை உறுதிப்படுத்தினார்.
ஆவடியில் சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ''தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் சிறந்த முதல்வர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார். என்று கூறினார். இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதற்கு தி.மு.க.வினர் மட்டுமின்றி நெட்டிசன்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் முதன் முறையாக முதல்வர் பொறுப்பில் அமர்ந்திருக்கும் மு.க.ஸ்டாலின் அரியணையில் அமர்ந்து மூன்று மாதங்கள் கூட நிறைவு பெறவில்லை.
ஆனால் இந்த குறுகிய நாட்களிலும் தனது திறமையான செயல்பாடுகளால் அவருக்கு இந்த உயரிய பாராட்டு கிடைத்துள்ளது. மே மாதம் தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியில் அமர்ந்தபோது தான் தேர்தலுக்கு முன்னதாக ஏற்கனவே வாக்குறுதி கொடுத்த 5 முத்தான திட்டங்களை அறிவித்து தொடக்கத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்தார் மு.க.ஸ்டாலின்.
அடுத்ததாக நேர்மையான, தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை உரிய முறையில் பயன்படுத்தியது மூலம் பொதுமக்களின் பாராட்டுகளை தொடர்ந்து அள்ளினார்.
மிகவும் முக்கியமாக ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தபோது தமிழ்நாடு கொரோனா இரண்டாவது அலையில் சிக்கி பரிதவித்தது.
ஆக்சிஜன் தட்டுப்பாட்டால், படுக்கைகள் இல்லாததால் மருத்துவமனைகளின் முன்பு ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளுடன் வரிசைகட்டி அணிவகுத்து நின்றன. இது ஒருபுறம் இருக்க கொரோனாவை ஒடுக்கும் தடுப்பூசிக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவியது. ஆனால் இந்த சிக்கலையெல்லாம் மு.க.ஸ்டாலின் திறம்பட சமாளித்தார். திறம்பட சமாளித்தார் உடனடியாக மத்திய அரசிடம் பேசி கூடுதல் தடுப்பூசிகளை தமழ்நாட்டுக்கு பெற்று தந்தார். வெளிமாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இருந்தும் ஆக்சிஜன் கொண்டு வந்து பற்றாக்குறையை சமாளித்தார்.
அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்களிடம் வேலை வாங்கி கொரோனா தடுப்பு பணிகளை முடுக்கி விட்டார். ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ரூ.4,000 கொரோனா நிவாரண நிதியும் வழங்கப்பட்டது. சிறப்பான செயல்பாடு இதன் காரணமாக ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு 36,000-க்கு மேல் சென்ற நிலையில் தற்போது வெறும் 2,500-க்குள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
நமது அண்டை மாநிலமான கேரளா கொரோனாவுடன் இன்றும் போராடிக் கொண்டிருக்க, தமிழ்நாட்டை கொரோனாவில் இருந்து மீட்டுள்ளார் மு.க.ஸ்டாலின். மேற்கண்ட சிறப்பான செயல்பாடுகளை வைத்தே 'ஓர்மாக்ஸ்' நிறுவனம் இந்தியாவின் சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலினை தேர்வு செய்துள்ளது.சிறந்த முதல்வர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 3-வது இடத்திலும், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா 4-வது இடத்திலும் இருக்கின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 5-வது இடத்தை பிடித்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்தயா நாத் 6-வது இடத்தையும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 7-வது இடத்தையும் கைப்பற்றியுள்ளனர்.