பற்கள் நலனில் அலட்சியம் வேண்டாம்!
வரும் முன் காப்பது என்பது நம்மிடம் கொஞ்சம் அரிதாகவே காணப்படுகிற பழக்கமாக உள்ளது. உடலில் ஏற்படும் எந்த பிரச்னை என்றாலும் அதை ஆரம்பத்திலேயே நாம் கவனிப்பதில்லை. நோய் முற்றி, தீவிரமான பிறகே மருத்துவ உதவியை பொதுமக்கள் நாடுகிறார்கள். குறிப்பாக பற்கள் நலனில் விழிப்புணர்வு இன்னும் மோசமாகவே உள்ளது.
பாதிப்பின் தொடக்கத்திலேயே மருத்துவ உதவியை நாடுவது பிரச்னையை எளிமையாக தீர்க்க மருத்துவர், நோயாளி என இரு தரப்புக்குமே உதவி செய்யும். கால தாமதம் அல்லது அலட்சியத்தால் பிரச்னை தீவிரமாகும்போது அது நோயாளியின் குணமாதலை தாமதப்படுத்துவதுடன், சிகிச்சைக்கான பொருளாதார சுமையையும் ஏற்படுத்துகிறது.
நம் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் காரணமாக முன்பு பற்கள் இந்த அளவுக்கு பாதிக்கப்படவில்லை. தற்போது நம் உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை இரண்டுமே பெரிதும் மாறியுள்ளது.சூடான உணவுகளையும், அதிகம் குளிரூட்டப்பட்ட உணவுகளையும் இன்று அதிகம் உண்கிறோம்.
வயது வந்தவர்கள் ஒருநாளில் காபி, டீயை கணக்கின்றி பருகுகின்றனர். குழந்தைகள் ஐஸ்க்ரீம் உள்ளிட்ட இனிப்புகளையும், நொறுக்குத்தீனிகளையும் உண்கிறார்கள். அதனால் பற்களில் ஆரோக்கியக் கேடு என்பது இயல்பாகவே வந்துவிடுகிறது. பற்களில் ஏதேனும் சிறு கரும்புள்ளி தென்படுவது, நிறம் மாறுவது என்ற சிறு அறிகுறிகள் தென்பட்டால்கூட எச்சரிக்கையடைய வேண்டும்.
பற்களின் எத்தகைய பிரச்னைக்கும் இன்று நவீன சிகிச்சைகள் உள்ளன என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்!