தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்
இந்தியாவிலேயே முதல்முறையாக, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் இன்று தமிழகத்தில் 40 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி போட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் ஒரே நாளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், மற்ற நாட்களில் தடுப்பூசி செலுத்த இயலாதவர்கள் இன்று தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கப்பட்டுள்ள இந்த மெகா தடுப்பூசி முகாம், மாலை 7 மணி வரை நடைபெற இருக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக கண்டறியப்பட்ட மாவட்டங்களில் கூடுதல் தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், செங்கல்பட்டு, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதலாக தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் வரை சுமார் 3.5 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், மீதம் உள்ளவர்கள் விரைந்து தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு ஏற்ற வகையில் இன்று இந்த மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது.
அதிலும் குறிப்பாக 2-வது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்கள், இன்று நடைபெறும் தடுப்பூசி முகாம் மூலமாக தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது