விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது தேசிய உளவு தொகுப்பு அமைப்பு
பயங்கரவாதம், பொருளாதார குற்றங்கள் உள்ளிட்டவற்றை தடுக்கும் வகையிலான, 'நேட்கிரிட்' எனப்படும் தேசிய உளவு தொகுப்பு அமைப்பை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் அறிமுகம் செய்வார்' என, தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2008 நவ., 11ல் மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து, பயங்கரவாதத்தை தடுக்கும் வகையில், உளவு அமைப்புகள் உட்பட அரசின் பல அமைப்புகளை ஒருங்கிணைக்கும் வகையில், நேட்கிரிட் அமைப்பை உருவாக்க 2010ல் முடிவு செய்யப்பட்டது.
இந்த புதிய அமைப்பின் வாயிலாக உளவு அமைப்புகள் உட்பட அரசின் பல்வேறு கண்காணிப்பு அமைப்புகள் தங்களிடம் உள்ள தகவல்களை பகிர்ந்து கொள்ளும். அதை மற்ற அமைப்புகளும் பயன்படுத்த முடியும்.
நம் நாட்டுக்குள் விமானங்களில் வருவோர், செல்வோர் குறித்த தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்படும். அதேபோல் வங்கிகள் வாயிலாக செய்யப்படும் அதிக முதலீடுகள், பரிவர்த்தனைகள் என, பல தரப்பட்ட தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்படும்.
இதன் வாயிலாக, பயங்கரவாதம், பொருளாதார குற்றங்களில் ஈடுபட வாய்ப்புள்ளவர்களை கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.
முதல் கட்டமாக 10 உளவு அமைப்புகளும், 21 சேவை அமைப்புகளும் இதில் இணைக்கப்பட உள்ளன. படிப்படியாக நாட்டில் உள்ள அரசின் அனைத்து அமைப்புகளும் இதில் இடம்பெறும்.
சி.பி.ஐ., வருவாய் புலனாய்வு, அமலாக்கத் துறை, மத்திய நேரடி வரி வாரியம், கேபினட் செயலகம், ஜி.எஸ்.டி., கண்காணிப்பு அமைப்பு, போதைப் பொருள் தடுப்பு அமைப்பு, தேசிய புலனாய்வு அமைப்பு என, பல உளவு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளின் தொகுப்பாக நேட்கிரிட் இருக்கும்.
இந்த அமைப்பை செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து கட்டமைப்புகளும் செய்யப்பட்டுள்ளன. மிக விரைவில் பிரதமர் நரேந்திர மோடி இந்த அமைப்பை அறிமுகம் செய்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது.