குண்டுவெடிப்பு நடத்த சதித்திட்டம் தீட்டிய 6 பயங்கரவாதிகள் கைது
தசரா திருவிழா அடுத்த மாதம் (அக்டோபர்) கொண்டாடப்பட உள்ளது. வடமாநிலங்களில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படும். அப்போது கூட்டம் அதிக அளவில் கூடுவது வழக்கம். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாடு முழுவதும் குண்டுவெடிப்பை அரங்கேற்ற சிலர் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக டெல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த கும்பலைப் பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ரகசியமாக மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கையில் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 2 பேர் உள்பட 6 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து டெல்லி போலீஸ் சிறப்பு கமிஷனர் நீரஜ் தாக்குர், இணை கமிஷனர் பிரமோத் குஷ்வஹா ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற நூல் சந்த் லாலா, அமீர் ஜாவீது ஆகிய 2 பயங்கரவாதிகள் உள்ளிட்ட 6 பேரை கைது செய்துள்ளோம். இவர்கள் நாடு முழுவதும் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற திட்டமிட்டிருந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் இருந்து ஒருவரையும், டெல்லியில் இருந்து 2 பேரையும், உத்தர பிரதேசத்தில் இருந்து 3 பேரையும் கைது செய்துள்ளோம். இவர்களில் 2 பேர் மஸ்கட்டை சேர்ந்தவர்கள். பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஏ.கே.47 ரக துப்பாக்கியைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட ஆயுத பயிற்சி 15 நாட்கள் அளிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற குழுவில் சுமார் 15 பேர் வங்கமொழியில் பேசியுள்ளனர். அவர்களுக்கும் ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் 2 குழுவாகப் பிரிந்துள்ளனர். ஒரு குழுவை தாவூத் இப்ராகிமின் சகோதரர் அனீஸ் இப்ராகிம் ஒருங்கிணைத்துள்ளார் என தெரிவித்தனர்.