ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை ! இறந்த உடல்களுடன் 5 நாட்கள் இருந்த குழந்தை !
பெங்களூரு பயதர்ஹலி என்ற இடத்தில் வசிப்பவர் சங்கர். பத்திரிகையாளரான சங்கர் கடந்த ஞயிற்றுக்கிழமை தனது குடும்பத்தினருடன் சண்டைபோட்டுக்கொண்டு வீட்டை விட்டு சென்று இருந்தார். அவர் 5 நாட்கள் கழித்து அதாவது வெள்ளிக்கிழமை இரவு வீட்டிற்கு வந்து கதவை தட்டிப்பார்த்தார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவரது மனைவி உட்பட குடும்பத்தில் இருந்த 5 பேர் இறந்து கிடந்தனர். இரண்டரை வயது குழந்தை மட்டும் இறந்த உடல்களுடன் இருந்தது. அக்குழந்தையும் அரை மயக்கத்தில் இருந்தது. குழந்தையின் தாய் சிஞ்சனா(34), பாட்டி பாரதி(51), குழந்தையின் சித்தி சிந்தூரனி, குழந்தையின் மாமா மது சாகர் ஆகியோர் இறந்து கிடந்தனர்.
அவர்களுடன் 9 மாத குழந்தை கூட இறந்து கிடந்தது. இறந்தவர்கள் கொலை செய்யப்பட்டதற்கான எந்த வித அறிகுறியும் இல்லை என்கிறார்கள் காவலர்கள். அவர்கள் தற்கொலை செய்திருக்கவேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
கூடுதல் கமிஷனர் முகர்ஜி இது குறித்து கூறுகையில், ``என்ன காரணத்திற்காக தற்கொலை செய்தனர் என்று இன்னும் தெரிய வரவில்லை. உயிருடன் மீட்கப்பட்ட குழந்தைக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்கள் உடல் சனிக்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
குடும்பத்தலைவர் சங்கர் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. ஒட்டுமொத்த குடும்பத்தையே இழந்து நிற்கும் அவரால் பேசக்கூட முடியவில்லை. இது குறித்து அவர் கூறுகையில், ``எனது மகள்கள் கணவனுடன் சண்டைபோட்டுக்கொண்டு எங்களது வீட்டிற்கு வந்திருந்தனர்.
பிரச்னையை பேசி தீர்த்து, அவர்களை கணவன் வீட்டிற்கு அனுப்பாமல் அவர்களை எனது மனைவி வீட்டிலேயே இருக்க ஊக்கப்படுத்தினார். எனது மகள்களை படிக்க வைக்க மிகவும் கடுமையாக உழைத்தேன். சிஞ்சனா தனது குழந்தைக்கு காதுகுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கணவருடன் சண்டையிட்டுக்கொண்டு எங்களது வீட்டிற்கு வந்திருந்தார்.
எந்த வித பணப்பிரச்னையும் கிடையாது’ என்றார். பக்கத்து வீட்டில் வசித்தவர்களிடம் கேட்டதற்கு சங்கர் தனது மகனுடன் சண்டையிட்டுக்கொண்டு வீட்டு விட்டுபுறப்பட்டு சென்றார் என்று தெரிவித்தனர். அவர் வெளியில் சென்றவுடன் தற்கொலை செய்திருக்கவேண்டும் என்று தெரிவித்த போலீஸார் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருப்பதால் தற்கொலை செய்து 5 நாட்கள் ஆகி இருக்கவேண்டும் என்று போலீஸார் தெரிவித்தனர். இந்த விவகாரம் பெங்களுரூவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.