ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு

#Death #India
Prasu
2 years ago
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ராயபாக் தாலுகா ஆலக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தப்பா. இவருக்கு சரத் ஹசிரே என்ற இரண்டரை வயது மகன் உள்ளார். நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன் விளையாடி கொண்டு இருந்த குழந்தை சரத் ஹசிரே திடீரென காணாமல் போனார்.

குழந்தை சரத் ஹசிரே

இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தை சரத் ஹசிரேவின் தந்தை சித்தப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் குழந்தை சரத்தை ஊர் முழுவதும் தேடி வந்தனர். ஆனால் எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இதனால் குழந்தையை யாரோ கடத்தி சென்றதாக, ஹாருகேரி போலீஸ் நிலையத்தில் சித்தப்பா புகார் அளித்து இருந்தார். அந்த புகாரின்பேரில் குழந்தை சரத்தை போலீசாரும் தேடிவந்தனர்.

இந்த நிலையில் சித்தப்பா வசித்த வரும் வீட்டில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் ஆழ்துளை கிணற்றுக்குள் 15 அடி ஆழத்தில் குழந்தை சரத் விழுந்து கிடந்தது தெரியவந்தது. அந்த குழந்தை 15  அடி ஆழத்தில் சிக்கி இருந்தது. குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்து கிடப்பதை பார்த்து சித்தப்பாவும், அவரது மனைவியும் கதறி அழுதனர். பின்னர் இதுபற்றி ஹாருகேரி போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சரத்தை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்து 24 மணி நேரம் ஆனதால் தண்ணீர், உணவு இன்றி குழந்தை சோர்வாக இருந்துள்ளது. மேலும் குழந்தையின் அழுகுரலும் கேட்காததால் அதன் கதி என்ன என்பது தெரியாமல் இருந்தது. தொடர்ந்து மீட்பு பணி நடந்து வந்த நிலையில்   இரவு குழந்தை சரத் இறந்து விட்டது. இதையடுத்து இறந்த குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.