குறும்புத்தனம் செய்த பேரனை கொலைசெய்த பாட்டி
கோவை ஆர்.எஸ் புரத்தில் குறும்புத்தனம் செய்த பேரனை பாட்டி கொடூரமாக அடித்து துன்புறுத்தியதால் ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தான்.
நித்தியானந்தம் - நந்தினி தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் நந்தினி ஒரு வயது மகனுடன் தாய் வீட்டில் தங்கியிருந்தார். அவர் அதேபகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார்.
எனவே குழந்தையை நந்தியின் தாயார் பார்த்துக் கொண்டார். இந்நிலையில், இரவு 9 மணிக்கு வீட்டிற்கு திரும்பிய நந்தினி, பேச்சு மூச்சு இல்லாமல் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த துர்கேஷைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்தப்போது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
குழந்தையின் உடலை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். குழந்தையின் உடலில் சிறு சிறு காயங்கள் இருந்ததையடுத்து தாய் மற்றும் பாட்டியிடம் விசாரணை நடத்தினர்.
போலீஸார் விசாரணை நடத்திய போது, குற்றத்தை பாட்டி நாகலட்சுமி ஒப்புக்கொண்டார். குழந்தை வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து வாயில் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால், பாட்டி வாயில் பிஸ்கட் கவரை வைத்து அழுத்தியுள்ளார்.
சிறிது நேரத்தில் குழந்தை மூச்சு திணறி இருந்தததாக நாகலட்சுமி தெரிவித்துள்ளார். இதையடுத்து நாகலட்சுமியை கைது செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.