ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே கூறிய தகவல் "ஏமாற்றுவதற்கான சதி" என அறிக்கை வெளியிட்ட இந்திய பா ம க நிறுவனர் ராம்தாஸ்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இலங்கை இனச்சிக்கல் குறித்து வெளிநாடு வாழ் தமிழர் அமைப்புகளுடன் பேச்சு நடத்துவதற்கும், விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவும் தயாராக இருப்பதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார். இது ஈழத்தமிழர்களையும், உலக நாடுகளையும் ஏமாற்றுவதற்கான சதி என்பதைத் தவிர வேறில்லை.
ஐ.நா. பொது அவைக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, நியுயார்க்கில் ஐ.நா. தலைமைச் செயலாளர் அண்டோனியா குட்ரசை சந்தித்துப் பேசிய பின்னர் இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளார். கோத்தபயவின் இந்த அறிவிப்பை மேலோட்டமாகப் பார்க்கும் போது கோத்தபய திருந்தி விட்டதாகவும், ஈழத்தமிழர்கள் மீது அக்கறை கொண்டிருப்பது போன்றும் நினைக்கத் தோன்றும். ஆனால், இது உண்மையைப்போல் காட்சியளிக்கும் பொய் தான்.
ஐ.நா. மனித உரிமை ஆணையம் அமைத்துள்ள பன்னாட்டு நெறிமுறை ஒன்றரை ஆண்டுகளில், போர்க்குற்றங்கள் குறித்த அனைத்து ஆதாரங்களையும் திரட்டி ஆவணப்படுத்தும். அவ்வாறு ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாக வைத்து மனித உரிமைகளில் அக்கறையுள்ள எந்த நாடும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் வழக்குத் தொடர்ந்து ராஜபக்சே குடும்பத்தினர் உள்ளிட்ட அனைத்து போர்க்குற்றவாளிகளுக்கும் தண்டனை பெற்றுத்தர முடியும்.
இது குறித்த அச்சம் தான் கோத்தபயவை இப்படியெல்லாம் பேச வைக்கிறது. அவரது இந்த கபட நாடகத்தை ஈழத்தமிழர்கள் நம்பவில்லை. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நம்பி ஏமாந்து விடக்கூடாது.
இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த ஆதாரங்களைத் திரட்டும் முயற்சிக்கு உலக நாடுகள் அனைத்தும் துணை நிற்க வேண்டும். ஆதாரங்கள் திரட்டப்பட்டவுடன் ராஜபக்சே சகோதரர்கள் உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றி தண்டிக்கவும், அதன் மூலம் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத்தரவும் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவற்றின் நிறைவாக ஐ.நா. மூலம் உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி தனித்தமிழீழம் அமைக்கவும் இந்தியா வகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.