உணவு விடுதியில் சேலை அணிந்து வந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு
உணவு விடுதியில் சேலை அணிந்து வந்த பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அது குறித்து மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
தங்களுடைய உணவகத்தின் கொள்கைப்படி ‘ஸ்மார்ட்’ உடை அணியவேண்டும். சேலை அணிந்தால் நுழைய அனுமதியில்லை என்று இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் உள்ள அந்த உணவு விடுதி நிர்வாகம் கூறியது.
இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தச் சம்பவங்களை அந்தப் பெண் காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
இதையடுத்து கண்டனக் குரல்கள் எழுந்தன.
இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையமும் உடனடியாக அந்த உணவு விடுதிக்கு கண்டனம் தெரிவித்தது.
அத்துடன் அந்த விடுதியின் மக்கள் தொடர்பு இயக்குநருக்கு அழைப்பாணை அனுப்பிய ஆணையம், 28ஆம் தேதி விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளது.
மேலும் சேலை அணிந்து வந்ததால் பெண் ஒருவரை உணவகத்துக்குள் அனுமதிக்காத இந்தச் சம்பவத்தை விசாரிக்க வேண்டும் என்றும் டெல்லி போலிஸ் ஆணையருக்கு தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.