தோண்டியது சாலை பணிக்காக... தோன்றியதோ சதுஸ்ர சிவலிங்கம்! - வைகைக்கரையில் நிகழ்ந்த அதிசயம்

Keerthi
2 years ago
தோண்டியது சாலை பணிக்காக... தோன்றியதோ சதுஸ்ர சிவலிங்கம்! - வைகைக்கரையில் நிகழ்ந்த அதிசயம்

சாலைப்பணிக்காக வைகைக்கரை கால்வாய் பகுதியில் தோண்டும்போது கிடைத்த 10-ம் நூற்றாண்டை சேர்ந்த சிவலிங்கம் ஒன்று கிடைத்து மதுரை மக்களைப் பக்தி பரவசப்படுத்தியுள்ளது.

மதுரை மட்டுமல்ல, அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் பழந்தமிழரின் தொன்மையும் பண்பாட்டுப் பெருமையும் புதைந்துள்ளது என்பதற்கு சமீபகாலமாகக் கிடைத்து வரும் தொல்பொருள்களே சாட்சி.

வைகை நதிக்கரை நாகரிகத்தை ஆய்வு செய்ய கீழடி, கொந்தகை, அகரம், மணலூரில் ஆய்வுகள் நடந்து வரும் நிலையில், தொல்லியல் ஆர்வலர்களால் உசிலம்பட்டி, பேரையூர், கல்லுப்பட்டி பகுதியில் மன்னர் கால போர் சின்னங்கள், மத அடையாளங்களைக் கண்டெடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் மதுரை தெப்பக்குளம் அருகே ஐராவதநல்லூரில் சாலை அகலப்படுத்தும் பணிக்காகக் கால்வாய்ப்பகுதியை தோண்டியபோது சதுரமான பீடத்தில் 2 அடி உயரமுள்ள சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.

வி.ஏ.ஓ அலுவலகத்தில் வைக்கப்பட்ட சிவலிங்கம் பற்றித் தகவல் தெரிந்ததும் அப்பகுதி மக்கள் மாலைகளுடன் வந்து வழிபடத் தொடங்கினார்கள். பின்பு அந்த சிவலிங்கம் வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் அரசு அருங்காட்சியத்தில் ஒப்படைக்கப்பட்டது.

10-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ள இந்த சிவலிங்கம் 'சதுஸ்ர சிவலிங்கம்' என்றும் சொல்லப்படுகிறது.

இதை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தியபின்புதான் உறுதியாகக் கூற முடியும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். மதுரை வட்டாரத்தில் மண்ணைத் தோண்டினாலே அரிய பொருள்கள், கடவுள் சிலைகள் கிடைப்பது தற்போது வழக்கமாகி வருகிறது.