குலாப் புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு
ஒடிசா மாநிலம்- கோபால்பூர் ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, குலாப் புயல் கரையைக் கடக்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
நேற்று முன்தினம், வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருந்தது.
இந்நிலையில், அது மேலும் புயல் சின்னமாக வலுப்பெற்று காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த புயலுக்கு ‘குலாப்’ என்று பெயர் சூடப்பட்டுள்ளது.
மேலும், வங்கக்கடலில் உருவாகி உள்ள குலாப் புயல் ஒடிசா மாநிலம்- கோபால்பூர் ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே இன்று மாலை கரையைக் கடக்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது.
இவ்வாறு குலாப் புயல் கரையைக் கடக்கும்போது, 85 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை குலாப் புயல் எதிரொலியாக தூத்துக்குடி, கடலூர், சென்னை, நாகை, துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.