தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று(திங்கட்கிழமை) மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான ‘குலாப்’ புயல் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளில் கரையை கடந்துள்ளது.
அதன் தொடர்ச்சியாகவும் தென்மேற்கு பருவகாற்று காரணமாகவும் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மிக கனமழையும், தென்காசி, குமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் மற்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை இடி-மின்னலுடன் கூடிய கனமழையும், மற்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.