புளியங்குளம் கிராமத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள்!

Keerthi
2 years ago
புளியங்குளம் கிராமத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா புளியங்குளம் கிராமத்தில் தனியார் நிலத்தில் 2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டறியப்பட்டது.
திருமங்கலம் அருகே புளியங்குளத்தில் தனியார் நிலத்தினை முட்செடிகளை அகற்றும்போது பழைமையான பானை ஓடுகள் இருப்பதாக சமூக ஆர்வலர் முருகேசன் கொடுத்த தகவல்படி மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத்துறை பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் து.முனீஸ்வரன் அப்பகுதியை ஆய்வு செய்தபோது அங்கே 2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள், இரும்பு உருக்கு கழிவுகள், எலும்புத் துண்டுகள், சிறிய கற்கருவிகள் மற்றும் கல்வட்டம் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் து.முனீஸ்வரன் கூறியதாவது,

பெருங்கற்காலத்தில் சேர்ந்த புதைந்த நிலையில் சுமார் 13 க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் மேற்குப்பகுதியில் உடைந்த நிலையிலும் புதைந்த நிலையிலும் உள்ளன. குறிப்பாக இதன் உள்ளே கருப்பு சிவப்பு நிறத்தில் மெல்லிய தடித்த பானைகள் ஓடுகள், உடைந்த கருவளையம் உள்ளது. ஒரு முதுமக்கள் தாழி சுமார் 74 சென்டி மீட்டர் விட்டத்தில் இரண்டு இன்ச் தடிமன் கொண்ட நிலையில் புதைந்து இருக்கிறது. மற்றொன்று இதை விட சிறியதாக 60 சென்டி மீட்டர் விட்டத்தில் ஒரு இன்ச் தடிமனிலும் உடைந்த நிலையில் இருக்கிறது.

தாழியின் உடைந்த ஓட்டின் வெளிப்பகுதியில் தாய் தெய்வம் போன்ற குறியீடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக மனிதன் இறந்த பின் மீண்டும் தாயின் கருவறைக்குள் சென்று பிறக்கிறான் என ஆதிமனிதன் நடுவில் அகன்று கருவுற்ற தாயின் வயிற்றைப் போன்ற அமைக்கப்பட்டிருக்கிறது.

பெருங்கற்காலத்தில் ஆரம்பத்தில் இறந்தவர்களின் உடலை தங்கள் வாழ்விடங்களுக்கு வெளியே மலைப்பகுதிகளிலும் காட்டுப் பகுதிகளிலும் போட்டுவிடுவார்கள் அதை நாய், நரி, கழுகு, பறவைகள், மிருகங்கள் இரையாகக் கொண்டபிறகு அங்குக் கிடக்கும் எலும்புகளைச் சேகரித்து அதோடு அவர்கள் பயன்படுத்திய மண்பானைகள், தானியங்களையும் உள்ளே வைத்து மூடி வீ வடிவ குழியில் வைத்து அடக்கம் செய்துள்ளனர். பிற்காலத்தில் தான் மனிதன் இறந்த பிறகு உடலை முதுமக்கள் தாழியில் வைத்து அடக்கம் செய்து அவர்கள் நினைவாக புதைத்த முதுமக்கள் தாழியைச் சுற்றி கல் அடுக்குகள் வைத்துப் பாதுகாத்துள்ளனர்.

இப்பகுதியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இடுகாடு சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. இடுகாடான அப்பகுதியிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் பெருங்கற்கால மக்களின் வாழ்விடமும் காணப்படுகிறது. கல்மேடு கட்டுமானப் பகுதிகள் சேர்ந்த நிலையிலும் அவர்கள் பயன்படுத்திய மண் பானை ஓடுகள் கருப்பு சிவப்பு கலந்த ஓடுகள் மேற்பரப்பில் காணப்படுகிறது.

பெருங்கற்காலத்தில் இரும்பு கண்டுபிடிக்கப்பட்டு அதனைப் பயன்படுத்தி வந்ததற்கான சான்றாக இரும்பு தாதுகள் நிறைந்த சிதைந்த நிலையிலும் நுண் கற்கால செதில்களும் காணப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் மண் தோன்றிய காலத்தில் தமிழனும் தோன்றியதாகச் சொல்லப்பட்டாலும் வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் கீழடி , ஆதிச்சநல்லூர், சிவகளை, அகரம் போன்ற அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களின் அடிப்படையில் தமிழர்களின் கல்வி, நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு அறியப்படுகிறது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மனித இனம் தோன்றி நாகரீக வளர்ச்சியோடு வாழ்ந்ததற்கான சான்றுகள் ஏராளமாக இருக்கிறது அதன் ஒரு பகுதியாக புளியங்குளம் பகுதியில் வரலாற்று எச்சங்கள் ஏராளமாக இருக்கிறது. மனிதர்கள் இறந்த பிறகு புதைக்கப்படும் பழக்கம் தொன்றுதொட்டு பின்பற்றி வருகிறார்கள் அழிந்துவரும் பெருங்கற்காலம் நாகரிகத்தையும் மற்றும் தமிழர் நாகரிகத்தைப் பேணிக்காப்பது ஒவ்வொரு தனிமனிதனின் கடமையாகும்" என்றார்.