செல்லப்பிராணிகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்:டெல்லி மாநகராட்சி அறிவிப்பு
டெல்லி கிழக்கில் உள்ள மக்கள் தங்கள் செல்லப்பிராணியாக வளர்க்கும் நாயை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது .
மக்களிடையே செல்லப்பிராணிகள் வளர்க்கும் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய், பூனை, கிளி, புறா போன்றவற்றை செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு கிழக்கு டெல்லியில் வசிக்கும் எவரேனும் தங்களது வீட்டில் நாயை செல்லப்பிராணியாக வளர்க்கும்பட்சத்தில் அதை கட்டாயமாக மாநகராட்சியில் பதிவு செய்ய வேண்டும் என டெல்லி கிழக்கு மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் இதற்காக பிரத்யேகமாக https://mcdonline.nic.in/vtlpetedmc/web/citizen/info எனும் வெப்சைட் லிங்கை அறிமுகம் செய்துள்ளது. இதில் பதிவு செய்ய கட்டணமாக ரூ. 1000ஆக வசூலிக்கப்படும் எனவும், மேலும், வருடா வருடம் இதை புதுப்பிக்க வேண்டும் எனவும் மாநகராட்சி அறிவித்துள்ளது.
தங்களது செல்லப்பிராணிகள் குறித்த விவரங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யாதவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது. மேலும், தெருநாய்களை செல்லப்பிராணிகளாக தத்தெடுத்தவர்களுக்கும் இந்த விதி பொருந்தும் என்றும், காணாமல் போன அல்லது கைவிடப்பட்ட செல்லப்பிராணிகளை உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்க, நாய்கள் பதிவு அதிகாரத்தால் வழங்கப்பட்ட காலர் அணிவதை கட்டாயமாக்க விரைவில் மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோன்ற வளர்ப்பு பிராணிகள் பதிவு செய்வதன் மூலம் வளர்ப்பு பிராணிகளின் உரிமையாளர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்க முடியும் எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.