இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் இணையும் 3-வது நிறுவனம் - மத்திய அரசு தகவல்
இந்தியாவில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்த நிலையில், 3-வது தடுப்பூசியாக ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
“கொரோனாவுக்கு எதிராக ஜைடஸ் கேடிலா நிறுவனம் உள்நாட்டில் உருவாக்கியுள்ள ஊசியில்லாத கொரோனா தடுப்பூசி விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த தடுப்பூசி விலை குறித்து தயாரிப்பு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த தடுப்பூசியை 3 டோஸ் போட வேண்டும். ஊசியின்றி ( மேல் தோலில் அழுத்தம் மூலம் ஊசியின்றி தடுப்பூசி செலுத்த முடியும்) செலுத்தக்கூடியது. தற்போதைய தடுப்பூசி விலையில் இருந்து இதன் விலை வேறுபட்டதாக இருக்கும். தடுப்பூசி திட்டத்தில் இந்த தடுப்பூசி இணைக்கப்படும்.”
இவ்வாறு அவர் கூறினார்.