தமிழகத்தில் 17 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, ஒரே நாளில் ஏராளமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் 12-ந் திகதிதமிழகத்தில் முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் 28.91 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அதையடுத்து கடந்த 19-ந் தேதி நடைபெற்ற 2-வது தடுப்பூசி முகாமில் 16.43 லட்சம் பேரும், 26-ந் தேதி நடந்த 3-வது முகாமில் 25.04 லட்சம் பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இந்தநிலையில் தமிழகத்தில் நேற்று 4-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
17 லட்சம் பேருக்கு தடுப்பூசி
தமிழகம் முழுவதும் நேற்று 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இந்த முகாம்கள் மூலம் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
காலை 7 மணிக்கு தொடங்கப்பட்ட இந்த தடுப்பூசி மையங்கள் பலவற்றில் தொடர்ந்து பொதுமக்கள் வரிசையாக காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
அந்தவகையில் தமிழகத்தில் நேற்று (இரவு 8 மணி நிலவரப்படி) 17 லட்சத்து 19 ஆயிரத்து 544 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் 9 லட்சத்து 68 ஆயிரத்து 10 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 7 லட்சத்து 51 ஆயிரத்து 534 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்.
முந்தைய முகாம்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட அதிகமாகவே பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டது. ஆனால் நேற்று அவ்வப்போது மழை பெய்த காரணத்தால் எதிர்பார்த்த அளவு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியாமல் போனது.
ஒட்டுமொத்தத்தில் கடந்த மாதம் (செப்டம்பர்) மட்டுமே தமிழகம் முழுவதும் நடந்த 3 கட்ட முகாம்களில் 1 கோடியே 44 லட்சத்து 75 ஆயிரத்து 866 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சென்னையில் 1½ லட்சம் பேர்
தமிழகத்தில் நேற்று நடைபெற்ற 4-வது மெகா தடுப்பூசி முகாமில் சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 851 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தமிழகத்திலேயே சென்னையில் அதிகமான தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடலூரில் 93 ஆயிரத்து 594 பேருக்கும், கோவையில் 81 ஆயிரத்து 454 பேருக்கும், திருப்பூரில் 80 ஆயிரத்து 66 பேருக்கும், திருச்சியில் 65 ஆயிரத்து 310 பேருக்கும், மதுரையில் 63 ஆயிரத்து 919 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.