தங்க பிஸ்கெட்டுகளாக மாறும் கோயில் நகைகள்
கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத நகைகளை தங்க பிஸ்கெட்டுகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்வதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. `
வழிபாட்டுக்குத் தேவையில்லாத நகைகளை உருக்கி வங்கிகளில் தங்க வைப்பு நிதியில் வைத்து வருமானம் ஈட்டுவோம்' என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ள கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர கிளம்பியுள்ளது. என்ன நடக்கிறது.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 44,301 கோவில்கள் உள்ளன. இவற்றில் அதிக வருவாய் வரக் கூடிய கோவில்களில் கடந்த 10 ஆண்டுகளாக காணிக்கையாக வந்த தங்க நகைகளில் ஏராளமானவை பயன்பாடில்லாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இவற்றை மத்திய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி, அதனை சொக்கத் தங்கமாக மாற்றி வங்கிகளில் தங்கம் வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இதன்மூலம் கிடைக்கும் வட்டியின் மூலம் கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக சட்டமன்ற மானியக் கோரிக்கையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
இதன் ஓர் அங்கமாக, கோவில்களில் நகைகளைக் கணக்கெடுக்கும் பணிகள் துரிதப்படுத்த சென்னை, மதுரை, திருச்சி ஆகிய மண்டலங்களுக்கு தனித்தனி நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, சென்னை மண்டலத்துக்கு நீதிபதி ராஜுவும் மதுரை மண்டலத்துக்கு நீதிபதி மாலாவும் திருச்சி மண்டலத்துக்கு நீதிபதி ரவி சந்திரபாபு ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்த முயற்சிக்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. `` கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்துவது என்பது அந்தக் கோவிலுக்கு மட்டுமே சொந்தமானது. கோவில் நகைகளை என்ன செய்ய வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும்.
அது அறநிலையத்துறையின் பணி அல்ல" என்கிறார் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் திருப்பதி நாராயணன். இந்த விவகாரத்தில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்பட இந்து இயக்கங்களின் தலைவர்கள், தமிழ்நாடு அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
67 நகைகள் எங்கே?
அறநிலையத்துறையின் முயற்சிகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய திருக்கோவில் திருமடங்கள் அமைப்பின் மாநில பொறுப்பாளர் பக்சி சிவராஜன், `` நகைகளை உருக்கி முதலீடு செய்வதற்கான உரிமை அரசுக்குக் கிடையாது.
கோவிலில் என்ன நோக்கத்துக்காக பக்தர்கள் காணிக்கையாகக் கொடுத்தார்களோ, அந்த நோக்கத்துக்காகத்தான் அவை செலவழிக்கப்பட வேண்டும்.
அதைவிடுத்து நகைகளை பிஸ்கெட்டுகளாக மாற்றுவது என்பது அதிகார அத்துமீறலாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது" என்கிறார்.