குட்கா எச்சில் கறைகளை சுத்தம் செய்ய பலநூறு கோடிகளை செலவிடும் ரயில்வேதுறை!
ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் எச்சில் கறைகளை சுலபமாக காண முடியும். குட்கா புகையிலையை வாயில் போட்டு அசைபோட்ட பின்னர் அந்த எச்சிலை துப்பி வைப்பதன் மூலம் ஏற்படும் கறையை நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டு தான் செல்கிறோம்.
நெடுந்தூரம் பயணங்கள் மட்டுமல்லாது குறுகிய தூர பயணம் மேற்கொள்பவர்கள் கூட மின்சார ரயில்களில் செல்லும் போது இந்த கறைகளை காண முடியும்.
இந்த குட்கா கறையை சுத்தம் செய்வதற்கு மட்டும் ஆண்டு ஒன்றுக்கு ரயில்வே வாரியம் 1,200 கோடி ரூபாயை செலவிடுகிறது என்றால் நம்ப முடிகிறதா? பொதுமக்கள் செய்யும் சிறு தவறுக்கு என்ன விலை கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதை கேட்க திகைப்பாக தான் இருக்கிறது.
இது முற்றிலும் மக்களின் வரிப்பணம் தான். ஆனால் வளர்ச்சித்திட்டங்களுக்கு பதிலாக இவை நாம் செய்யும் அசுத்தத்தை சுத்தம் செய்வதற்காக வீணாக செலவிடப்படுகிறது.
தூய்மை இந்தியா திட்டம் பரவலாக பிரபலமடைந்து வந்தாலும் மக்களின் நடத்தையில் அடிப்படையில் மாற்றங்களை கொண்டு வர முடியவில்லை. ஆனால் அவர்கள் செய்யும் செயலின் விபரீதத்தை அவர்கள் உணரவில்லை.
இதனிடையே இந்த பிரச்னைக்கு தீர்வு ஒன்றை ரயில்வே வாரியம் முன்வைத்திருக்கிறது. எச்சில் துப்புவதற்காகவே ரயில்நிலையங்களில் ஆங்காங்கே பேசின்களை வைக்க இருக்கின்றனர்.
முதலாவதாக நாட்டின் 42 ரயில் நிலையங்களில் சோதனை முயற்சியாக இதனை அமல்படுத்த இருக்கின்றனர்.
5 முதல் 10 ரூபாய் விலை கொண்ட எச்சில் பைகளை வாங்கி அவற்றில் எச்சில் துப்பி, பின் அவற்றை இந்த பேசின்களில் போட்டுவிடலாம்.
இந்த புதுமையான முறையை அமல்படுத்திய பின்னராவது எச்சில் கறைகளை சுத்தம் செய்வதற்காக செலவிடும் நூற்றுக்கணக்கான கோடிகளை மிச்சப்படுத்தலாம் என ரயில்வே துறையினர் கருதுகின்றனர்.