70 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி

Keerthi
2 years ago
70 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி

குஜராத்தின் கட்ச் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி, தன் முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ளது, பலரையும் ஆச்சரியபடுத்தியுள்ளது.குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள கட்ச் பகுதியைச் சேர்ந்த வால்ஜிபாய் ரபாரி, 75, அவருடைய மனைவி ஜிவுன்பென் ரபாரி தம்பதிக்கு, திருமணமாகி 45 ஆண்டுகளாகின்றன. குழந்தை இல்லையே என்ற ஏக்கம் அவர்களுக்கு தொடர்ந்து இருந்து வந்தது.இந்நிலையில், செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தை பெற்றெடுக்க அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, புஜ் பகுதியில் உள்ள பிரபல செயற்கை கருவூட்டல் மருத்துவமனையை அணுகினர். 'இந்த வயதில் குழந்தை பெற்றெடுப்பது மிகவும் ஆபத்தானது' என, டாக்டர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

'இறப்பதற்கு முன் ஒரு குழந்தைக்கு தாயாக விரும்புகிறேன்' என, அந்த பாட்டி உறுதியுடன் கூறினர்.அதைத் தொடர்ந்து அவருக்கு மீண்டும் மாதவிடாய் ஏற்படுவதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.வயது காரணமாக சுருங்கிய கர்ப்பப்பை, அறுவை சிகிச்சையால் விரிவுபடுத்தப்பட்டது. இவ்வாறு சில மாதங்கள் நடந்த சிகிச்சைகளுக்குப் பின் செயற்கை முறையில் கருவூட்டல் நடந்தது.இந்த வயதில், அதுவும் முதல் முயற்சியிலேயே, அந்த முதிய தம்பதிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு லாலோ என அதற்கு பெயரிட்டுள்ளனர்.இது குறித்து, அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் கூறியுள்ளதாவது:நம் நாட்டில் தற்போது செயற்கை முறை கருத்தரிப்பு அதிகளவில் நடக்கிறது. அதிக வயதில் குழந்தை பெற்றவர் என்ற சாதனை, ஐரோப்பிய நாடான ஸ்பெயினைச் சேர்ந்த மரியா டெல் கார்மென் போசடா லாரா பெயரில் உள்ளது.

இவர் கடந்த 2006ல், தன் 66 வயதில் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானார்.குஜராத் பாட்டி 70 வயதில் தாயாகி உள்ளது புதிய சாதனையாகும். சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நம் நாட்டில் 2019ல் ஆந்திராவைச் சேர்ந்த மங்கயம்மா என்ற பெண், 74 வயதில் இரண்டு பெண் குழந்தைகளை, செயற்கை கருவூட்டலில் பெற்றெடுத்தார். ஆனால், சாதனை புத்தகத்தில் அது இடம்பெறவில்லை.இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.