கோவிட் மாத்திரை உற்பத்தி செய்ய ஐதராபாத் நிறுவனம் விண்ணப்பம்!
அமெரிக்காவைச் சேர்ந்த மெர்க் நிறுவனம் கோவிட்டை குணப்படுத்தும் மோல்னுபிராவிர் மாத்திரையை உருவாக்கியுள்ளது. இதன் ஜெனரிக் வெர்ஷனை தயாரிக்க அனுமதி வழங்கும் படி ஆப்டிமஸ் பார்மா எனும் ஐதராபாத் நிறுவனம் இந்திய மருத்துக் கட்டுப்பாட்டாளரிடம் விண்ணப்பித்துள்ளது. மோல்னுபிராவிர் மாத்திரையின் திறன், பாதுகாப்பு மற்றும் செலவு ஆகியவற்றை பற்றி சோதனை நடத்த ஆப்டிமஸ் பார்மா நிறுவனத்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் மே மாதம் அனுமதி தந்தார். லேசான கோவிட் தொற்று இருப்பவர்களிடம் இந்த மாத்திரையை அளித்து பரிசோதித்தனர். தற்போது சோதனை நிறைவடைந்துள்ளது.
மோல்னுபிராவிர் மாத்திரை தந்து வந்த 5-வது நாளில் 78 சதவீத நோயாளிகளுக்கு கோவிட் நெகடிவ் முடிவு வந்துள்ளது. அதுவே மருந்து போலி தரப்பட்ட நபர்களிடம் 48 சதவீதத்தினருக்கு மட்டுமே நெகடிவ் என முடிவு வந்துள்ளது. மோல்னுபிராவிரின் மருந்துப் பொருளுக்கு காப்புரிமை வழங்கப்படவில்லை. மெர்க்கால் தாக்கல் செய்யப்பட்ட மருந்து கலவைக்கு மட்டுமே காப்புரிமை உள்ளது.
எனவே ஆப்டிமஸ் சொந்த மருந்து கலவையை உண்டாக்கி பரிசோதனைக்கு விண்ணப்பித்தது. ஏ.பி.ஐ., எனப்படும் மருந்து மூலப்பொருட்களையும் உள்நாட்டிலேயே தயாரிப்பதாக கூறுகிறது. ஆப்டிமஸ் நிறுவனத்துக்கு அனுமதி கிடைத்தால் இரண்டு வாரங்களில் 1 கோடி காப்ஸ்யூல்களையும், நான்கு முதல் ஆறு வாரங்களில் 4 கோடி காப்ஸ்யூல்களையும் உற்பத்தி செய்யும். இதன் ஒரு காப்ஸ்யூல் விலை ரூ.30 ஆக நிர்ணயித்துள்ளனர்.