கம்பர்
“கம்பன் வீட்டுத் கட்டுத்தறியும் கவிபாடும்” என்றொரு பழமொழியே உருவாகும் அளவிற்கு, கம்பரது புகழும், கவித்திறமையும் அனைவராலும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ‘கவிபேரரசர் கம்பர்’, ‘கவிச்சக்ரவர்த்தி கம்பர்’, ‘கல்வியில் பெரியவர் கம்பர்’ என்றெல்லாம் அவரது கவித்திறனைப் பறைசாற்றும் அளவிற்கு அவருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியில் சொல்வன்மைக் கொண்டவராக இருந்த அவர், ஆழமான கவிதை அனுபவமும், கற்பனை ஆற்றலும், புலமைத் திறனும் பெற்று, அவரது சமகாலத்துப் புலவர்களான ஓட்டக்கூத்தர், சேக்கிழார் போன்றோரின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். ‘கம்பராமாயணம்’, ‘சிலையெழுபது’, ‘சடகோபர் அந்தாதி’, ‘சரசுவதி அந்தாதி’, ‘திருக்கை வழக்கம்’, ‘ஏரெழுபது’ மற்றும் ‘மும்மணிக்கோவை’ போன்றவை அவர் படைத்த படைப்புகளாகும். இதில், ‘கம்பராமாயணம்’, தமிழ் இலக்கியத்தில் தலைச்சிறந்த காவியமாகக் கருதப்படுகிறது. மேலும், கம்பரின் தனித்துவமான சுவைக்கினிய பாணியில் அதைப் படைத்ததால், அது உலகளாவிய அங்கீகாரம் பெற்றது எனலாம். ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர், அறிஞர், கவிஞர், நாடக ஆசிரியர், என்று பன்முகம் கொண்டு விளங்கிய கம்பர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய சாதனைகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: கிபி 1180
பிறப்பிடம்: திருவழுந்தூர், தஞ்சை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு: கிபி 1250
பணி: தமிழ்க் கவிஞர்
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
கம்பர் அவர்கள், கிபி 12 ஆம் நூற்றாண்டில், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவழுந்தூர் என்னும் இடத்தில் ஆதித்தன் என்பவருக்கு மகனாக ஒச்சன் என்ற உட்பிரிவில் பிறந்தார். அவரது பெற்றோர்கள், கடவுள் நரசிம்மரின் தீவிர பக்தர்கள் என்பதால், அவருக்கு ‘கம்பர்’ என்று பெயர் சூட்டினர். ‘கம்பா’ என்றால் ‘தூண் என்று பொருள். ‘பக்தப் ப்ரகலாதனைக் காக்க, நரசிம்மர், தூணைப் பிளந்து கொண்டு வந்தார்’ என்ற பக்திக் கூற்றைக் கொண்டு, அவருக்கு அப்பெயர் சூட்டினர் அவரது பெற்றோர்.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்
நாதஸ்வர வித்வான்களான ஒச்சன் பரம்பரையில் பிறந்திருந்தாலும், அவர் தமிழ்நாட்டில் உள்ள வெண்ணைநெல்லூர் என்னும் ஊரில் உள்ள ஒரு பணக்கார விவசாயி ஒருவரால் செல்வ, செழிப்போடு எடுத்து வளர்க்கப்பட்டார். இளம் வயதிலிருந்தே அவர், தொன்மையான மொழிகளான சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியின் மீது பேரார்வம் உடையவராக இருந்ததால், அவரது நலம் விரும்பியான வள்ளல் சடையப்ப முதலியார் என்பவரின் உதவியுடன் அவ்விருமொழிகளை மிகுந்த ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தார். சிறு வயதிலிருந்தே அவருக்குக் கவிதைகள் எழுதும் ஆர்வம் இருந்தது. அம்மொழிகளின் அடிப்படையை பாரம்பரிய முறையில் நன்கு கற்ற அவர், பல கவிதைகளும், நூல்களும் எழுதத் தொடங்கினார். அதன் பின்னர், அவரது கவிப்புலமை எட்டுத்திக்கும் பரவத் தொடங்கியது.
கம்பரின் கவிப்புலமை
மாபெரும் கவிஞராக உருவெடுத்த கம்பரின் புகழை அறிந்த அப்போதைய சோழ மன்னர், அவருக்கு அழைப்பு விடுத்தார். அரண்மனைக்கு சென்ற அவர், மன்னரின் அன்பு கட்டளைக்கிணங்க அவரது படைப்புகளில் சில வரிகளை அவருக்குப் பாடிக் காட்டினார். அவரது கவித்திறனை நேரில் கண்டு வியந்த சோழ மன்னர், அவருக்கு, ‘கவிஞர்களின் பேரரசர்’ என்றும் அர்தமுடைய ‘கவி சக்கரவர்த்தி’ என்றும் பட்டம் சூட்டி, அவருக்கு சொந்தமான பெருவாரிய நிலத்தைப் பரிசளித்து, அதற்கு ‘கம்பநாடு’ என்றும் பெயர் சூட்டினார்.
இலக்கிய வாழ்க்கை
கம்பரின் தாய்மொழி, தமிழ் என்றாலும், சமஸ்கிருதத்திலும் அவர் புலமைப் பெற்றே விளங்கினார். அதற்கு சான்று, அவர் எழுதிய ‘கம்பராமாயனம்’. முனிவர் வால்மீகி சமஸ்கிருதத்தில் படைத்த ராமாயணத்தை, அவர் தமிழில், அவருக்குரித்தான பாணியில் மீண்டும் எழுதினார். அவரது பாடல் வரிகளின் அழகு, அற்புதமான நயம், உவமானம் மற்றும் பல வகையான வியக்கத்தகு கவிதை நடைகள் அவரது பாரம்பரிய கவிதைகளில் இடம் பெற்றிருக்கும். தமிழ்மொழியின் பெருமையை, இடைக்கால காலகட்டங்களில் அற்புதமாக வெளிக்காட்டியதால், அவர் ‘கம்ப நாட்டாழ்வார்’ என்றும் அழைக்கப்பட்டார். அவர், கம்பராமாயணம் தவிர, ‘சிலையெழுபது’, ‘சடகோபர் அந்தாதி’, ‘சரசுவதி அந்தாதி’, ‘திருக்கை வழக்கம்’, ‘ஏரெழுபது’ மற்றும் ‘மும்மணிக்கோவை’ போன்ற அற்புதப் படைப்புகளைப் படைத்துள்ளார்.
கம்பராமாயணம்
கம்பராமாயணம், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தனிப்பட்ட இடத்தைப் பிடித்து, தமிழ் இலக்கியத்தையே வானளவிற்கு உயர்த்தியது என்று சொன்னால் அது மிகையாகாது. கவிதை வடிவங்களில் ஆளுமைப் பெற்றவராக இருந்த அவர், வார்த்தைகளில் பலவிதமான அற்புதங்களை நிகழ்த்துபவர் என்பது அக்காவியத்தில் பல இடங்களில் தெளிவாகத் தெரியும். உருவகமும், உவமானமும் நிறைந்த கம்பராமாயணம், பின்னாளில் வரும் கவிஞர்களுக்கு ஒரு குறிப்புதவி நூலாக அமைந்தது. வால்மீகி எழுதிய ராமாயணத்தில் 24, 000 ஈரடிகள் இருக்கும், ஆனால், கம்பராமாயணத்தில் 11, ௦௦௦ சந்தங்கள் இருக்கும். தமிழர்களின் கலாச்சார உணர்திறனுக்கேற்ப அவர், வால்மீகியின் ராமாயணத்தில் பல இடங்களை மாற்றி அமைத்துள்ளார். அவற்றுள் சில:
சீதையைக் கண்ட ஆஞ்சநேயர், அதை ராமனிடம் தெரிவிக்கும் போது, “கண்டனன் கற்பினுக் கணியை கண்களால் ….” என்ற அற்புத வார்த்தைகள் இன்றளவும் தமிழ் இலக்கியத்தில் மறக்கமுடியாத அடிகளாக இருந்து வருகிறது.
இராவணன், சீதையைக் கடத்திக் கொண்டு போகும் போது, “அவள் கற்பிற்கே இலக்கணமாக இருந்தாள் என்பதற்காக, அவள் இருந்த குடிசையோடு சிறிதளவு நிலத்துடன் பெயர்த்தெடுத்து அவளைக் கடத்திக்கொண்டு போனான்” என்றும் அற்புதமாக விளக்கியிருப்பார்.
போரில், ராமன் தொடுத்த ஒரு அம்பு, அவனது உடல் முழுவதும் துளைகளை ஏற்படுத்தியது. இதைக் கம்பர், “ராவணன் சீதை மீது கொண்ட அழிவுநோக்கிய காதல், அவனது உடலில் எங்குள்ளது என்பதை அறியும் சல்லடையாக இருந்தது அந்த அம்பு” என்று யாராலும் யூகிக்க முடியாத அளவிற்கு அற்புதமாக விளக்கியிருப்பார்.
இறப்பு
கவிச்சக்ரவர்த்தி கம்பர், கிபி 1250 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
இதுவரை வந்த தமிழறிஞர்கள் பட்டியலில், கம்பர் யாரும் எட்ட முடியாத இலக்கில் உள்ளார் என்று தான் சொல்லவேண்டும். ஆனால், இன்றளவும் தமிழ் அறிஞர்கள் மத்தியில், கம்பனின் கவிதைத் தொகுப்புகள் இணையற்றதாகவே உள்ளது என்று சிறப்பாகவும், பெருமிதத்தோடும் சொல்லலாம்.