இந்தியாவில் குஜராத்தின் மாநிலத்தில் வதோதரா நகரத்தில் விமான உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
இது உலகின் ஒன்பதாவதும், இந்தியாவின் நான்காவதும் மற்றும் குஜராத்தின் முதலாவதுமான விமான உணவகமாகும்.
குறித்த உணவகம் வதோதரா நகரத்தில் அதிவேக வீதிக்கு அருகில் உள்ள பிரதான வீதியில் அமைந்துள்ளது.
இந்த விமான உணவகத்தில் ஒரே நேரத்தில் 106 பேர் உணவருந்த முடியும். இங்கு பணியாளரை அழைப்பதற்காக விமானத்திலுள்ளது போல் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், விமானப் பணியாளர்கள் குழு போன்று பணிபுரியும் ஊழியர்கள் இங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த உணவகத்தை உருவாக்க பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து ஏர்பஸ் 320 வாங்கப்பட்டுள்ளது.
விமானத்தின் ஒவ்வொரு பகுதியும் வதோதரா நகருக்க கொண்டு வரப்பட்டு, அது ஒரு உணவகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது என உணவகத்தின் உரிமையாளரான நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த உணவகம் நீங்கள் நிஜ வாழ்க்கை விமானத்தில் பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். பஞ்சாபி, சைனீஸ், கான்டினென்டல், இத்தாலியன், மெக்சிகன் மற்றும் தாய் உட்பட பல்வேறு உணவு வகைகள் இங்கு கிடைக்கின்றன
ஒரு தனித்துவமான வடிவமைப்பு என்றும் உண்மையில் விமானத்தில் அமர்ந்திருப்பது போல் உணர்ந்தேன் என்றும் உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்தில் ஒருவர் விமானத்தில் ஏறுவது போல், இந்த உணவகத்தில் நுழையும் அனைவருக்கும் விமான டிக்கெட் போன்ற போர்டிங் பாஸ் வழங்கப்படுகிறது.