உலக சகிப்புத்தன்மை தினம் 16-11-2021

#history
உலக சகிப்புத்தன்மை தினம் 16-11-2021

மக்களிடையே சகிப்புணர்வின்மையின் பயங்கரமான விளைவுகளையும் சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையின் தேவையை அவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவும் நவம்பர் 16 அன்று யுனெஸ்கோ நிறுவனத்தால் இந்நாள்  கொண்டாடப்படுகிறது.

மேலும் யுனெஸ்கோ நிறுவனத்தின் 50-ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வண்ணம் வருங்காலத் தலைமுறையினரைக் கருத்தில் கொண்டு அகில உலக அளவில் இந்நாள் கடைபிடிக்க வேண்டும் என்ற தீர்மானம் 1995-ம் ஆண்டு ஐ.நா.பொது அவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த உறுதிமொழியின்படியே ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இது வெறும் நன்னெறி, கோட்பாடு மட்டும் அல்ல. இது சட்ட திட்டங்களாக அரசியல் கோட்பாடுகளாக நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று இதன் இலக்கணம் வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தினத்தில் மக்களிடையே சகிப்புணர்வு இல்லாததால் ஏற்படும் மோசமான விளைவுகள் எடுத்துச் சொல்லப்படுகிறது. ஒவ்வொருவரும் மற்றவரின் அடிப்படை உரிமை, கருத்துகள், சுதந்திரம், கலாச்சாரம், மத நம்பிக்கை போன்றவற்றை அங்கீகரிக்கவும் மதிக்கவும் வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.

இவ்வகையான சகிப்புத்தன்மை ஏற்பட தனிமனிதன் மட்டுமின்றி ஒவ்வொரு அரசின், அரசியல் தீர்வும் முக்கியம். இதற்கு நமது தேசப்பிதாவான மகாத்மா காந்தியை உதாரணமாகச் சொல்லலாம்.
மனித குலம் வாழ்வதற்குத் தேவையான அன்பு, பரிவு, ஒற்றுமை ஆகிய பல உயர்ந்த உணர்வுகளுக்கு அடிப்படையாகக் குறைந்தபட்சம் சகிப்புத் தன்மையாவது நம்மிடையே இருக்க வேண்டும் என்பதை இந்நாள் நமக்கு நினைவூட்டுகிறது