கஞ்சா பயன்படுத்தினால் மனநோய் வரும்

Keerthi
3 years ago
கஞ்சா பயன்படுத்தினால் மனநோய் வரும்

நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் சூப்பிரண்டும், மனநல மருத்துவத்துறை பேராசிரியருமான டாக்டர் அருள்பிரகாஷ் கஞ்சா போதையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கூறியதாவது:-

கஞ்சா பழக்கத்தை பொறுத்தவரையில் வளர் இளம் பருவம், மாணவர்கள் பருவம் ஆகிய பருவத்தில்தான் தொடங்குகிறது. இவர்கள் முதலில் பரீட்சார்த்த முறையில் இந்த பழக்கத்தை தொடங்குகிறார்கள். அதில் என்ன இருக்கிறது என்பதை பார்ப்போம்? என்ற ஆர்வமும், உடன் இருக்கும் நண்பர்களின் அழுத்தமும், எளிதாக கிடைப்பதும் இந்த பழக்கம் தொடங்குவதற்கான முதல் காரணங்களாகும். முதலில் தொடங்கும்போது அவர்களுக்குள் இனம்புரியாத ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்துவது போன்றும், சிறு, சிறு உடல் வலிகள், மன வலிகள் தெரியாமல் இருப்பது போன்றும் உணர்வுகள் ஏற்படும்.

அதிக அளவில் கஞ்சா புகையை உட்கொள்ளத் தொடங்கும்போது வானில் பறப்பது போன்றும், உல்லாச வானில் மிதப்பது போன்றும் சிறிது நேரத்துக்கு இருக்கும். இவ்வாறு தொடர்ச்சியாக கஞ்சாவை பயன்படுத்தும்போது அது மூளையில் பதிந்து, கஞ்சா இருந்தால்தான் அன்றாட பணிகளை, அலுவல்களை கவனிக்க முடியும் என்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஒரு மாதம் முதல் 3 மாதங்கள் வரையில் தொடர்ந்து கஞ்சாவை பயன்படுத்தினாலே இம்மாதிரியான நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள். குறைந்தது ஒரு மாதம் எடுத்தாலே கஞ்சாவுக்கு அடிமையாகும் சூழ்நிலை உருவாகிறது.

ஒரு சிலருக்கு கஞ்சாவை பயன்படுத்த தொடங்கும்போதே சில உடல் பாதிப்புகள் ஏற்படத் தொடங்கிவிடும். சிலருக்கு தூக்கக் குறைவு, பசியின்மை, தலைவலி, எரிச்சல், கோபம், போன்ற ஆரம்ப கட்ட அறிகுறிகள் வரலாம். சிலருக்கு ஆரம்ப கட்ட மனநிலை பாதிப்பும், மன அழுத்தமும் ஏற்படலாம். தொடர்ச்சியாக கஞ்சாவை பயன்படுத்தும்போது வேறு எந்த காரியத்திலும் ஆர்வம் இல்லாத நிலையும் வரும். உதாரணமாக படிப்பு, வேலை ஆகியவற்றில் ஆர்வம், நாட்டம் இருக்காது. தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால்கூட அதைக்கூட பொருட்படுத்தாமல் கஞ்சாவை பயன்படுத்துவதில்தான் சம்பந்தப்பட்ட நபர் ஆர்வம் காட்டுவார். அதற்காக திருட்டு போன்ற சிறு, சிறு குற்றச் செயல்களிலும் ஈடுபடத் தொடங்கி விடுவார் அந்த நபர்.

கஞ்சா கிடைக்காதபோது அந்த நபர்கள் தூக்கம் இல்லாமல் இருப்பார்கள். தலைவலியுடன் அலைந்து திரிவார்கள். பிறரிடம் எரிச்சலடைவது, தேவையில்லாமல் கோப்படுவது, பதற்றத்துடன் காணப்படுவது, அங்கலாய்ப்புடன் அலைவது, கட்டுப்படுத்த முடியாத ஆசையைக் கொண்டிருப்பது போன்ற செயல்கள் அவர்களிடம் காணப்படும், எதைச் செய்தாவது கஞ்சாவை அடைய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவர்களிடம் இருக்கும்,

பாதிப்புக்குள்ளாகும் நபர்களில் சில குறிப்பிட்ட சதவீதத்தினர் எந்த உந்துதலும் இல்லாமல் சோர்வான நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதன்பிறகு அவர்களால் படிக்க முடியாது. வேலையில் அக்கறை இருக்காது. குடும்பத்தினர் மீதான பாசம், அக்கறை எதுவும் அவர்களிடம் காண முடியாது. எனவே அவர்கள், குடும்பத்துக்கு தேவையில்லாத நபராகவும், பயனற்ற மனிதராகவும் மாறுவார். இன்னும் அதிகமாகும்போது கஞ்சா எடுப்பதால் ஏற்படும் மனநோய்கள் உருவாகும். அவ்வாறு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மாயக்குரல்கள் கேட்பது போல் இருக்கும். தவறான சிந்தனை ஓட்டம் ஆரம்பிக்கும். இல்லாத ஒன்றை இருக்கிறது என்று நம்புவார். எப்போது பார்த்தாலும் தன்னுடைய எதிரி யாரோ இருப்பது போன்றும், போலீஸ் தன்னை தேடி வந்துவிடுவார்களோ? என்பதைப் போன்ற மன பயம் அவர்களுக்கு இருந்து கொண்டிருக்கும். கிட்டத்தட்ட அந்த நபர் மனநோயாளிபோல் மாறிக் கொண்டிருப்பார். ஒரு சிலருக்கு கை, கால் நடுக்கம், தனக்கு எதுவும் ஏற்பட்டு விடுமோ? என்ற கவலை, மன பதற்றம் ஏற்படும். அவர்கள் மனதளவிலும், உடல் அளவிலும் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

போதை பழக்க வழக்கங்களில் ஈடுபடுபவர்களில் கஞ்சா போதை பழக்கத்தில் மட்டும் குமரி மாவட்டத்தில் குறைந்தது 4 சதவீதம் முதல் அதிகபட்சமாக 12 சதவீதம் வரை இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த பழக்கம் அதை பயன்படுத்தும் நபரை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும். தொடர்ச்சியாக பயன்படுத்தும் நபருக்கு கஞ்சா கிடைக்காதபோதுதான் அவர் வன்முறையில் ஈடுபட்டாவது அதைப்பெற வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது. சிந்திக்கிற திறன் அந்த நபருக்கு போய்விடுவதால் அந்த நபர் குற்றச்செயலில் ஈடுபடுகிறார். கஞ்சா பயன்படுத்தும் நபருக்கு உடல் வலிமை அதிகமாகும் என்று சொல்வது தவறு. இதனால் அவர் வலு குறையத்தான் செய்யும். இந்த தவறான போதை பழக்கத்தால் ஒரு தனி மனிதனின் உற்பத்தித் திறன் குறைவதோடு, நாட்டின் உற்பத்தி திறனும் பாதிக்கப்படுகிறது.

இவ்வாறு கஞ்சா போதைக்கு அடிமையானவர்களை மனநல மருத்துவம் மூலம் சரிசெய்ய முடியும். அதற்கு அவர்களுடைய ஒத்துழைப்பும் அவசியம். அவர்கள் மனதளவில் இந்த பழக்கத்தைவிட்டு வெளியே வரவேண்டும், சமூகத்தில் தானும் ஒரு நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட வேண்டும். முதலில் இம்மாதிரியானவர்களுக்கு கவுன்சிலிங்தான் எங்களின் முதல் கட்ட மருத்துவமாக இருக்கும்.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!