உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஓரினச்சேர்க்கை பெண் ஜோடி முறையீடு - பாதுகாப்பு வழங்க ஐகோர்ட் உத்தரவு

Keerthi
2 years ago
உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஓரினச்சேர்க்கை பெண் ஜோடி முறையீடு - பாதுகாப்பு வழங்க ஐகோர்ட் உத்தரவு

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இரு இளம் பெண்கள் ஒரினச்சேர்க்கை ஜோடியாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், இதற்கு இரு வீட்டு பெண்களின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தனியாக தம்பதிகளாக வசித்து வருகின்றனர். ஆனாலும், இரு வீட்டு பெற்றோரும் இப்பெண் ஜோடிக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரியும் ஓரினச்சேர்க்கை பெண் ஜோடி அலகாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், இப்பெண்கள் தாக்கல் செய்த மனு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நாங்கள் எங்கள் உறவை முறித்துக்கொள்ளவில்லை என்றால் கொன்று விடுவோம் என்று எங்கள் பெற்றோர் மிரட்டல் விடுக்கின்றனர். மேலும், எங்கள் மீது போலியான குற்றப்புகார்களை அளித்து கைது நடவடிக்கையை மேற்கொள்ளவும் எங்கள் பெற்றோர் முயற்சிக்கின்றனர் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கேஜே தாகர் மற்றும் அஜய் தியாகி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஓரினச்சேர்க்கை பெண் ஜோடியின் ஆவணங்கள் அனைத்தையும் சரிபார்த்தபின் ஓரினச்சேர்க்கை பெண் ஜோடிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது.