உலக கழிவறை தினம் 19-11-2021

#history #International
உலக கழிவறை தினம் 19-11-2021

இன்று உலக கழிவறை தினம். மாறிவரும் யுகத்திற்கு ஏற்ப, பல்வேறு தொழில்நுட்பங்களுடன் கழிவறைகளும் நவீனமயமாகி வருகின்றன. 

அனைவருக்கும் கழிவறை வசதி கிடைக்க வேண்டும். அவை, சுகாதாரமானதாக இருத்தல் வேண்டும் என்ற குரல்கள், ஒலிக்கத்தான் செய்கின்றன. அருவருப்பாக பார்க்கப்பட்ட கழிவறைகள், அழகு மிக்கதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நவீன யுகத்தில் இல்லங்களில் கழிவறைகள் விருந்தினர்களால் பயன்படுத்தப்படும்போது, முகம் சுளித்துவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்துவோரும் இருக்கின்றனர். இதன் காரணமாக கழிவறைகளுக்கான பிரத்யேக வணிக நிலையங்கள் உருவாகின. 

கால ஓட்டத்திற்கேற்ப, கழிவறைகளும் பல தொழில் நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டு வருகின்றன. தண்ணீர் டாங்க்குடன் கூடிய கழிவறை, சுவரில் பொருத்தக்கூடிய கழிவறை, தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்தும் வசதி கொண்ட கழிவறை என பல்வேறு வடிவங்களில் கழிவறைகள் தயாரிக்கப்படுகின்றன. குறைந்த இடத்தில் நுட்பமாக அமைக்கப்படும் கழிவறைகளை, மக்கள் அதிகமாக விரும்புவதாக தெரிவிக்கின்றனர் விற்பனையாளர்கள்.

சுகாதாரம் தொடங்கும் இடமாக இருக்கும் கழிவறைகளை, மக்கள் தங்கள் தேவைக்கு ஏற்ற வகையில் தேர்வு செய்கின்றனர் என்றும், குழந்தைகளுக்கும் ஏற்ற வகையில் கழிவறைகள் கிடைக்கப்பெறுவதாகவும் தெரிவிக்கும் கணேஷ்குமார், திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாத நிலை நம்நாட்டில் உருவாக வேண்டும் என்கிறார்.

கழிவறை தொடர்பாக பேசவே தயங்கிய மக்கள் மத்தியில், இதுகுறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவது வரவேற்கப்பட ஒன்று. பொருளாதாரத்தை தாண்டி, ஒரு நாட்டின் வளர்ச்சியில் சுகாதாரமும் முக்கிய பங்காற்றுகிறது. ஆரோக்கியமான சமுதாயம் உருவாக, நம் வீட்டையும், ஊரையும் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ளுதல் அவசியம். அப்போதுதான், உலக அரங்கில் சமச்சீரான வளர்ச்சிக்கொண்ட இந்தியாவை உருவாக்க முடியும். அதற்கு, இந்த உலக கழிவறை தினத்தில் நாம் உறுதி எடுத்துக்கொள்வோம்.