இந்தியாவில் வருகிறது ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசி..
ரஷ்யாவில் உற்பத்தி செய்து பயன்படுத்தப்படும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் இந்தியாவில் டிசம்பர் மாதம் அறிமுகம் ஆகிறது.
கோவாக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசி 2 டோஸ் போட வேண்டிய நிலை உள்ள நிலையில், ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை ஒருமுறை போட்டாலே போதுமானது. இந்தியாவில் ஸ்புட்னிக் லைட் அறிமுகம் குறித்து ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,119 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,45,44,882 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 10,264 பேர். இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,39,67,962 ஆக உள்ளது. தற்போது 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணிநேரத்தில் 396 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகள் அனைத்தும் மேற்கொண்ட தீவிர முயற்சி காரணமாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு நாடுகளில் தடுப்பூசியை தயாரித்துள்ளனர். இதில் கோவாக்ஸின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் என அறிமுகம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருவதால் கொரோனாவின் தாக்கம் ஓரளவு குறைந்துள்ளது. ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்திருந்தாலும் தடுப்பூசி போடப்பட்டதின் விளைவாக கடந்த ஆண்டை காட்டிலும் உயிரிழப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
கோவிஷீல்டு, கோவாக்ஸின் போல் அல்லாமல் ஒருமுறை மட்டுமே செலுத்தக்கூடிய ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் ஆகிறது. ஸ்புட்னிக் தடுப்பூசியின் 3வது கட்ட பரிசோதனையை இந்தியாவில் நடத்த டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகத்திற்கு இந்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளித்திருந்தது.
சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததால் இந்தியாவில் அடுத்த மாதம் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை அறிமுகம் செய்யப்போவதாக ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை செயல் அதிகாரி கிரில் டிமிட்ரிவ் தெரிவித்து உள்ளார். மேலும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி செலுத்திய 6 முதல் 8 மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக 80 சதவீதம் செயல்படுகிறது. என்றும் அவர் கூறினார். இந்தியாவில் ஸ்புட்னிக் லைட் தயாரிக்கும் பணியில் சீரம் இருக்கும் என்றும் இந்திய தடுப்பூசி திட்டத்தில் ஸ்புட்னிக் லைட் முக்கிய பங்கு வகிக்கும் என்று நம்புவதாகவும் கிரில் டிமிட்ரிவ் தெரிவித்தார்.
கெரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை இந்தியாவில் இதுவரை 77,36,70,169 முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. 2வது டோஸ் 42,01,74,572 போடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 1,19,38,44,741 டோஸ் போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் முதல் டோஸ் 25,07,849 இரண்டாவது டோஸ் 65,19,789 ஆக மொத்தம் 90,27,638 டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 4,40,90,403 முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. 2வது டோஸ் 2,27,03,431 போடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 6,67,93,834 டோஸ் போடப்பட்டுள்ளது.