ஈமெயிலை கண்டுபிடித்த ஈழத்தமிழன் இவரா? யார் இவர்?
''நான் 1978ல் இமெயிலைக் கண்டு பிடித்தது ஒரு இந்தியனாக கண்டு பிடித்தேன். ஒரு தமிழனாகக் கண்டு பிடித்தேன். ஒரு தமிழனாக இமெயிலைக் கண்டுபிடித்ததில் பெருமையடைகிறேன். இதை இவ்வளவு காலம் கழித்து சொல்ல வேண்டியிருக்கிறது.
காரணம் அப்போது இதை பிரபலம் பண்ணும் அளவிற்கு என்னிடம் வழக்கறிஞரோ அல்லது உடனிருந்து வழி நடத்துவதற்கான நபரோ இல்லை. பதினான்கு வயது சிறுவன் என்ன செய்வான். காப்பி ரைட் பற்றி அவனுக்கு என்ன தெரியும்?
ஆனால் இப்போது உரக்கச் சொல்ல வேண்டிய நேரம் இது. நம்மிடம் உள்ள ஒவ்வொரு இந்தியக் குழந்தையும், ஒவ்வொரு தமிழ்க் குழந்தையும் இதைக் கண்டு பிடித்தது. ஒரு 14 வயது இந்தியப் பையன், தமிழ்ப் பையன் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 14 வயது இந்திய பையனால் முடியும் என்றால் எல்லா இந்தியராலும் முடியும்.
ஏழு வயதில் அமெரிக்கா போனேன். போன இடம் அங்கே ஏழைகளின் நகரமான பேட்டர்சன். பலரும் நினைப்பது போல அமெரிக்காவில் எல்லாருக்கும் எல்லாம் உண்டு என்பது மாயை. அங்கும் ஏழைகளின் ஊர், பணக்காரர்களின் ஊர் வெள்ளையர்களின் ஊர், கறுப்பர்களின் ஊர் என்று பாகுபாடுகள், பிரிவினைகள் உண்டு.
நாங்கள் பேட்டர்சன் நகரத்திலிருந்து படிப்படியாக வசதியான லிவிங்ஸ்டன் -நியூஜெர்ஸி நகரத்துக்குச் சென்றோம். எனக்கு இது புதிராக இருந்தது. ஆனாலும், படிப்பில் கணிதத்தில், மருத்துவத்தில் எனக்கு மிகவும் ஆர்வம். கல்லூரிக்கான பாடத்திட்டத்தை 9 வயதில் முடித்தேன். அதற்குமேல் படிப்பதற்கு இல்லை. எனவே 1978ல் நியூயார்க் பல்கலைக் கழகம் அமெரிக்காவில் 40 மாணவர்களைத் தேர்வு செய்து மென் பொருள் பயிற்சி கொடுத்தது. அதில் தேர்வான ஒரே இந்தியன் நான்தான்.
அப்போதே 7 புரோகிராம் லாங்வேஜ்களை முடித்திருந்தேன். மேலும் 6 புரோகிராம் லாங்வேஜ்களை முடித்தேன். நியூயார்க் என்கிற ஊரில் 3 மருத்துவக்கல்லூரி நடத்திய மைக்கேல்சன் என்பவர் எனக்கு ஒரு வேலை கொடுத்தார்.
அங்கு நான் போனபோது 14 வயதுதான். வேலை பார்த்தவர்கள் 30 வயது 40 வயது கொண்டவர்கள். ஆனால் மைக்கேல்சன் எனக்கு அவர்களுக்குச் சமமான மரியாதை கொடுத்தார். சம்பளமும் கொடுத்தார். இது முழுக்க முழுக்க என் தகுதி பார்த்து கொடுத்தது. அப்போதே 14, 15 செமினார் கூட நடத்தினேன்.
எனக்கு ஒரு சவாலான வேலை கொடுத்தார். அங்கு ஒவ்வொரு அலுவலகத்திலும் கணினிகளை இணைப்பது சிரமமாக இருந்தது. நிறைய மனித உழைப்பைச் சாப்பிட்டது. சிக்கலாகவும், சிரமாகவும் இருந்தது. இதற்கு ஒரு வழி கண்டுபிடிக்கவும், 30 அலுவலகங்களை இணைத்து 3 கல்லூரிகளை இணைப்பது எப்படி எனக் கண்டுபிடிக்கவும் சொன்னார்.
அப்படி கண்டுபிடிக்கப்பட்டதுதான் இமெயில். அப்போது அப்பர் கேஸில் 5 கேரக்டர்கள் மட்டுமே வர முடியும். எனவேதான் Email என்று பெயர் வைத்தேன். இதுதான் இமெயில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு.
இதுமாதிரி புதுமாதிரியான கண்டு பிடிப்புகள் எல்லாம் ஆங்கிலேயருக்கு மட்டுமே உரிமையானது, தகுதியுள்ளது என்பது அவர்கள் நினைப்பு. எனவே எனக்கு எதிராக 'ரேட்டியான்' என்கிற கும்பல் மோசடிகள், போர்ஜரியில் ஈடுபட்டு என்னை வம்புக்கு இழுத்தார்கள். நான் அவர்களுடன் மோதி வெற்றி பெற்றேன். இமெயில் என்றால் அது 'சிவா அய்யாதுரைதான்' என்று வெற்றி பெற்றேன். அதுவரை 'இமெயில்' என்கிற வார்த்தை ஆக்ஸ்போர்டு டிக் ஷனரியில் இல்லை. 1978க்குப் பிறகுதான் எல்லா டிக் ஷனரியிலும் வந்தது.''!!!!